மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 19)
எல்லாவற்றுக்கும் குறைசொல்பவர்கள்!
முற்றும் துறந்த துறவி பட்டினத்தார். ஒரு சமயம் அவர் நீண்டதூரம் நடந்துவந்த களைப்பினால், அறுவடை நடந்து முடிந்திருந்த வயலில், தலையை வரப்பில் வைத்துக்கொண்டு அப்படியே தூங்கினார்.
அப்போது பெண்கள் இருவர் பட்டினத்தார் படுத்திருந்த பக்கமாய் நடந்து வந்தார்கள். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி, “அங்கே பாரடி! யாரோ ஒரு துறவி படுத்திருப்பது போன்று தெரிகிறது” என்று சொல்லிக்கொண்டு, அவரை நோக்கி கும்பிட்டுவிட்டுக் கடந்துபோனாள். இன்னொரு பெண்ணோ, “அந்த ஆளையா துறவி என்று சொல்கின்றாய்… தலையணை வைத்துத் தூங்குவது மாதிரி, வரப்பை தலையாக வைத்துக்கொண்டு தூங்குகிறான். இவனா துறவி, சுகவாசி!” என்று கடுஞ்ச்சொல் வீசிவிட்டுக் கடந்து போனாள். அந்தப் பெண் சொன்ன சொல் லேசாக பட்டினத்தாரின் காதில் விழ, “அட கிரகத்த!, அசதியில் தலையை வரப்பில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டோம். அதற்காகவா இந்தப் பெண்மணி இப்படிப் பேசிவிட்டுப் போகிறாள், எதற்கு இந்த வீண்வம்பு என்று, வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்துக்கொண்டு தூங்கத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில் அந்த வழியாகப் போன பெண்கள் இருவரும் திரும்பி வந்தனர். பட்டினத்தார் வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்துக்கொண்டு தூங்குவதைப் பார்த்த முதல் பெண்மணி பரிதாபப்பட்டு, “பாத்தியாடி! நீ சொன்னதைக் கேட்டு, உடனே அவர் தன்னுடைய தலையை கீழே இறக்கி வைத்துக்கொண்டு படுத்துவிட்டார். இப்போதாவது ஒத்துங்கள். அவர் முற்றும் துறந்த முனிவர் என்று” என்றாள். இரண்டாவது பெண்மணியோ, “அடி போடி! இவனெல்லாம் முற்றும் துறந்த முனிவரா? தன்னைப் பற்றிய யார் யார் என்னென்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக்கேட்கின்றான். அதைப் பற்றிக் கவலைப்படுகிறான். இவனெல்லாம் ஒரு துறவியா? என்று போடு போட்டாள். பட்டினத்தாருக்கு தலைசுற்றிப் போனது.
நாம் எப்படி இருந்தாலும், என்ன செய்தாலும் அதைக் குறை சொல்வதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் இதுபோன்று எதற்கெடுத்தாலும் குறைகூறி வந்த பரிசேயக் கூட்டத்தை ஆண்டவர் இயேசு கடுமையாகச் சாடுகின்றார். அவர்களுடைய போக்கை சிறுபிள்ளைத்தனம் என கண்டிக்கின்றார்.
மெசியாவின் வருகைக்காக இஸ்ரயேல் மக்களைத் தயார் செய்தவர் திருமுழுக்கு யோவான். அவர் பாலைவனத்தில் இருந்து, ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு, மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தும் மக்கள் மனமாற வேண்டும் என்று அழைப்பு விடுத்தும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவந்தார். அப்படிப்பட்டவரை பரிசேயக் கூட்டம் ‘பேய் பிடித்தவன்’ என்று விமர்சித்தது. இதற்கு மாறாக ஆண்டவர் இயேசு மக்களோடு சேர்ந்து உண்டார், குடித்தார். அவர்களோடு பழகினார். ஆனால் பரிசேயக் கூட்டமோ அவரை, “இவன் பாவிகளின் நண்பன்”, பெருந்தீனிக்காரன் என்று விமர்சனம் செய்தது. இப்படி எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தாலும் விமர்சிக்கின்ற, குறைகூறுகின்ற போக்கைத்தான் ஆண்டவர் இயேசு சிறுபிள்ளைத் தனம் என்று கடுமையாகச் சாடுகின்றார்.
இங்கு நாம் இரண்டு காரியங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். ஒன்று விமர்சனத்தின் தேவை பற்றி. இன்னொன்று தேவையற்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளது? அல்லது புறந்தள்ளுவது பற்றி.
நம்மை நோக்கி வருகின்ற எல்லா விமர்சனங்களையும் நாம் கெட்டவை என்று புறந்தள்ளிவிட முடியாது. நம்மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், நம்முடைய வளர்ச்சியில் பெரிதும் மகிழக் கூடியவர்கள் சொல்லக்கூடிய விமர்சங்களை நாம் நம்முடைய கருத்தில் கொள்ளவேண்டும், சமயங்களில் அவை நம்மை கஷ்டப்படுத்தினாலும்கூட. யாராரெல்லாம் இப்படிப்பட்ட வளர்ச்சிக்குரிய விமர்சனங்களை கருத்தில்கொண்டு செயல்படுகின்றார்களோ, அவர்கள் தங்களுடைய வாழ்வில் முன்னுக்கு வருவது உறுதி.
இன்னொரு வகையான விமர்சனம் இருக்கின்றது. இப்படிப்பட்ட விமர்சனம் ஒருவரை அதாள பள்ளத்தில் தள்ளி, வீழ்த்தக்கூடியவையாகவே இருக்கும். இப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் பொறாமையின் அடிப்படையில் வரக்கூடியவை ஆகும். ஆண்டவர் இயேசுவின்மீது வீசப் பட்ட விமர்சனங்கள் இதுபோன்றவைதான். இயேசு அத்தகைய விமர்சனங்களை விவேகத்தோடு கையாண்டு, அதனை ஒதுக்கிக் தள்ளினார். பொது வாழ்வில் ஈடுபடக்கூடியவராக இருக்கட்டும் குடும்ப வாழ்வில் ஈடுபடுபவராக இருக்கட்டும். யாராக இருந்தாலும் இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளுவது நல்லது.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், நம்மீது வீசப்படுகின்ற விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்வோம். பிறருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை விடுத்து, அவர்களின் வளர்ச்சிக்குத் துணையாக இருப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Comments are closed.