இளையோரின் கனவுகளில், பாதுகாப்பு முதலிடம்
இன்றைய உலகில் வாழும் இளையத் தலைமுறையினர், குடும்பம், தாய் நாடு, கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கை என்ற பல வேர்களை இழந்துவிடும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நிகழும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், செப்டம்பர் 14, இவ்வெள்ளியன்று அந்நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 39வது அமர்வில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இளையோரை மையப்படுத்தி, வருகிற அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய இளையோர் காணும் கனவுகளில், பாதுகாப்பு, நிலையான தன்மை, நிறைவு ஆகியவை முதலிடம் பெறுகின்றன என்று கூறியுள்ளதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வுலகின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதைப்போல் தோன்றினாலும், உலகின் அனைத்து நாடுகளிலும், நீதியான ஊதியத்துடன், மாண்பையும் இணைத்து வழங்கும் வேலைகள் இளையோருக்கு எட்டமுடியாத கனவாகி வருகின்றன என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் கவலையை வெளியிட்டார்.
பல வடிவங்களில் பாகுபாடுகளை அனுபவிக்கும் இளையோர், நம்பிக்கை இழந்து, வன்முறை கும்பல்கள், மற்றும் குற்றங்கள் புரியும் கும்பல்கள் ஆகியவற்றில் இணையும் ஆபத்து வளர்ந்து வருகிறது என்ற கவலையையும் பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் வெளியிட்டார்.
இளையோர் சந்திக்கும் இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக, அவர்களின் கல்வியும், எதிர்கால தொழிலும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்குமாறு, அரசுகள் திட்டங்கள் தீட்டுவது இன்றைய அவசரத் தேவை என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
அனைத்திற்கும் மேலாக, இயற்கை வளங்கள் நிறைந்த பூமிக்கோளத்தை, வருங்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்வது, தலைமுறைகளுக்கு இடையே நிலவவேண்டிய நீதி என்பதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையின் இறுதியில் வலியுறுத்தினார்
Comments are closed.