நற்செய்திப்பணி வழியாக காயங்கள் குணப்படுத்தப்பட
பல்வேறு கடும் துன்பங்களுக்கு மத்தியில், தலத்திருஅவை, உயிரூட்டத்துடனும், இறைவாக்குப்பண்புடனும் பணியாற்றி வருகின்றது என்று, இத்தாலியின் சிசிலி பகுதி கத்தோலிக்கரை இச்சனிக்கிழமையன்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியில் சிசிலித் தீவிலுள்ள Piazza Armerina மறைமாவட்டத்திற்கு, இச்சனிக்கிழமை காலை 8.40 மணியளவில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Piazza Armerina நகரின் ஐரோப்பா வளாகத்தில், ஆடல்பாடல்களுடன் மகிழ்வோடு காத்திருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.
சமூக மற்றும் கலாச்சாரத்தில் வளர்ச்சியின்மை, தொழிலாளர் சுரண்டப்படுதல், இளையோர்க்குத் தரமான வேலையின்மை, குடும்பங்களாக வேறு இடங்களில் குடிபெயர்தல், கந்துவட்டி, குடிப்பழக்கம், சூதாட்டம், சிதைந்த குடும்ப உறவுகள், போதைப்பொருள்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் Piazza Armerina மக்கள் துன்புறுவது பற்றி தன் உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சிசிலித் தீவின் இந்த மத்திய பகுதியில், புதியவழியில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இப்பகுதியில், திருஅவை, மறைபோதக பிறரன்பின் திருஅவையாகப் பணியாற்றி வருவதை ஊக்கப்படுத்தினார்.
உடலிலும், மனத்திலும் தோல்விகண்டுள்ள மக்களை வரவேற்று, இரக்கமுள்ள ஒரு திருஅவையாக, இப்பகுதி திருஅவை பணியாற்றி வருகின்றது என்று உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவ பிறரன்பு என்பது, தொண்டுபுரிவது அல்ல எனவும் எடுத்துரைத்தார்.
Comments are closed.