மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 17)

இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை”

பெருநகர் ஒன்றில் பர்னிச்சர் கடை வைத்திருந்தார் அந்த தொழிலதிபர். கீழ் தளத்தில் வேறொரு கடையும் வைத்திருந்தார் அவர். ஒருநாள் அவர் வைத்திருந்த இரண்டு கடைகளும் தீப்பிடித்து, உடமைகள் எல்லாம் எரிந்துபோயின. எல்லாரும், ‘அவ்வளவுதான். தொழிலதிபரின் கதை முடிந்தது’ என்று பேசத் தொடங்கினார்கள்.

அன்று மாலையே கட்டிட வாசலில் ஒரு விளப்பரப் பலகை வைக்கப்பட்டது. அதில், “கடை எரிந்தது! பொருட்களும் கருகின! வீடு கருகியது! ஆனால் நம்பிக்கை கருகவில்லை! நாளை முதல் கடை செயல்படும்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்துவிட்டு, அந்தத் தொழிலதிபரின் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டு, எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

நம்பிக்கை மட்டும் நமக்கிருந்தால் போதும்!. நம்முடைய வாழ்வில் நாம் இழந்த அத்தனையையும் திரும்பப் பெற்றுவிட முடியும். அதைதான் இந்த நிகழ்வானது நமக்கு அழகாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, சாகும்தருவாயில் இருக்கும் நூற்றுவத் தலைவருடைய பணியாளருக்கு நலமளிப்பதைக் குறித்துப் படிக்கின்றோம். இந்த வல்ல செயல், நூற்றுவத் தலைவர் ஆண்டவர் இயேசுவின் மீதுகொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையினாலேயே சாத்தியப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. விவிலியத்தில் இயேசு கிறிஸ்து இரண்டு முறை வியந்தார் என்று குறிப்புகள் வரும். ஒன்று, தன் சொந்த ஊரில், மக்கள் தன்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்ததைக் கண்டு வியந்தது. (மாற் 6:6) இரண்டு, இன்றைய நற்செய்தியில் (7:9) வரும் நூற்றுவத் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியந்தது. ஆண்டவர் இயேசுவே ஒருவருடையே நம்பிக்கைக் கண்டு வியந்தார் என்றால், அவருடைய நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆண்டவர் இயேசு நூற்றுவத் தலைவருடைய நம்பிக்கையைக் கண்டு வியந்தார் என்பதற்கு நாம் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று அவர் மெசியாவைக் குறித்து தெரிந்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லாத ஒரு புறவினத்தார். மெசியாவைக் குறித்து அதிகமாகத் தெரிந்திருந்த யூதர்களே அவர் வந்தபோது, அவரைப் புறக்கணிக்கும்போது (யோவா 1:11), மெசியாவைக் குறித்து சிறிதுகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லாத நூற்றுவத்தலைவர் இவ்வளவு ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றாரே என்றுதான் இயேசு அவருடைய நம்பிக்கையைக் கண்டு வியக்கின்றார்.

இயேசு நூற்றுவத் தலைவருடைய நம்பிக்கையைக் கண்டு வியப்பதற்கு இன்னொரு காரணம், அவர் தன்னை சாகும்தருவாயில் இருக்கும் தனது பணியாளரைப் பார்க்க வாரும் என்றோ, அவரைத் தொட்டுக் குணப்படுத்தும் என்றோ சொல்லவில்லை. மாறாக ஒருவார்த்தை சொல்லும் என்னுடைய பணியாளர் நலமடைவார் என்கின்றார். அதாவது ‘ஒருவார்த்தை போதும்’ வேறொன்றும் வேண்டாம் என்று இருந்ததால்தான் இயேசு நூற்றுத்தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியக்கின்றார், ‘இஸ்ரேயலரிடத்திலும் இதுபோன்ற நம்பிக்கையை நான் கண்டதில்லை என்றும் அவரைப் பாராட்டுகின்றார்.

விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள், நூற்றுவத் தலைவரின் நம்பிக்கை, முடக்குவாத முற்றவரைப் படுக்கையில் கொண்டுவர நான்கு பேரின் நம்பிக்கையை விடப் பெரியது என்று. ஏனென்றால் அவர்கள் நான்கு பேரும் முடுக்குவாதமுற்றவரை இயேசுவிடத்தில் கொண்டு வந்து, குணம்பெறச் செய்தார்கள். நூற்றுவத் தலைவரோ தன் பணியாளரை இயேசுவிடத்தில் கொண்டுவராமலே, அவரை சாவிலிருந்து மீட்டெடுக்கின்றார். இதுதான் நூற்றுவத் தலைவரின் நம்பிக்கை மற்ற எல்லாரிடம் நம்பிக்கையையும் விட உயர்ந்திருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது.

நூற்றுவத் தலைவரிடத்தில் விளங்கிய இன்னும் ஒருசில பண்புகள் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. ஒன்று, அவர் தன்னுடைய பணியாளரிடத்தில் காட்டிய இரக்கமும் சக மனிதர்களிடத்தில் காட்டிய அன்பும் ஆகும். பணியாளர்கள் என்றால், கிள்ளுக்கீரையென பார்க்கப்பட்ட அந்த காலக்கட்டத்தில், நூற்றுவத் தலைவர் தன் பணியாளர் சாகும்தருவாயில் இருப்பதைக் கண்டு அவருக்காக இயேசுவிடம் பரிந்துபேசுகின்றார். அது மட்டுமல்லாமல், தான் புறவினத்தாராக இருந்தாலும் யூதர்கள் அவரிடத்தில் தொழுகைக்கூடம் கட்டிக்கொடுக்கச் சொன்னதும் மறுக்காமல் அவர்களுக்கு தொழுகைக்கூடத்தைக் கட்டித் தருகின்றார். இவையெல்லாம் அவர் பணியாளர்களிடத்திலும் சகமனிதர்களிடத்தில் கொண்டிருந்த இரக்கத்திற்கும் அன்பிற்கும் சான்றாக அமைக்கின்றது.

நூற்றுவத் தலைவரிடத்தில் விளங்கிய தாழ்ச்சியையும் நாம் சொல்லியாக வேண்டும். உரோமைப் படையில் நூறு வீரர்களுக்குத் தலைவர் என்றால் அவ்வளவு பெரிய பதவி. அப்படிப்பதட்ட பதவியில் இருந்தபோதும் இயேசுவிடத்தில் அவர் இறங்கி வந்து பேசுகின்றார். இவ்வாறு அவர் நம்பிக்கைக்கும் பிறர் மீது காட்டும் அன்பிற்கும் தாழ்சிகும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார்.

ஆகவே, நூற்றுவத்தலைவரைப் போன்று நாம் இயேசுவிடத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.