தோல்விகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்

உலகின் பாவம் அனைத்தையும் தம்மீது ஏற்றுக்கொண்ட இயேசுவின் திருச்சிலுவையின் மகிமையை நாம் தியானிப்போம் என்று, திருச்சிலுவையின் மகிமை விழாவான இவ்வெள்ளி காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், திருச்சிலுவையின் மகிமை விழாவை மையப்படுத்தி ஆற்றிய மறையுரையில், தீயவனான சாத்தான் கட்டுண்டு கிடந்தாலும் குரைத்துக்கொண்டிருக்கின்றான் என்றும், நாம் அவனுக்கு நெருக்கமாகச் சென்றால், நம்மை அழித்துவிடுவான் என்றும் எச்சரித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்வில் தோல்வியும், வெற்றியும் இருக்கின்றன, ஆயினும், வாழ்வின் மோசமான நேரங்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை, ஏனெனில், அந்நேரங்கள், தீமைமீது கடவுள் அடைந்த வெற்றியின் அடையாளமாக உள்ள, இயேசுவின் சிலுவையால் ஒளியூட்டப்படும் என்று, மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விழா திருப்பலியில் எண்ணிக்கை நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகம் பற்றி விளக்கிய திருத்தந்தை, விடுதலைப்பயணத்தில் கடவுளுக்கும், மோசேக்கும் எதிராகப் பேசிய இஸ்ரயேல் மக்கள் கொள்ளிவாய்ப் பாம்புகளால் தண்டிக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்டார். மிகப்பெரும் பழிசுமத்துபவனான, பழங்காலப் பாம்பான சாத்தான் சாவைக் கொணர்ந்தது, ஆயினும், ஆண்டவர் மோசேக்குக் கூறியபடி, கம்பத்தில் உயர்த்தப்பட்ட பாம்பைப் பார்த்தவர்கள் உயிர்பிழைத்தனர் என்றும் கூறியத் திருத்தந்தை, புனித வெள்ளியன்று சாத்தான் மகிழ்ந்தது, ஆனால், அது வீழ்ச்சியடையும் என்பதை அறிந்திருக்கவில்லை என்றும் உரையாற்றினார்.
நமது வெற்றி, இயேசுவின் சிலுவையே, இச்சிலுவை, மிகப்பெரும் பழிசுமத்துபவனான பழங்கால சாத்தானாகிய பகைவனை வெற்றிகண்டது என்றுரைத்த திருத்தந்தை, தம்மையே மிகவும் தாழ்த்திய இயேசுவின் சிலுவையால், நாம் மீட்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

Comments are closed.