புதிய ஆயர்களிடம் திருத்தந்தை – இறைவனை வாழ்வின் மையமாக்குங்கள்

ஆயர்களாக பணியாற்ற அழைப்பு பெற்றுள்ள நாம், இதனை நமக்குக் கிடைத்த ஓர் அரிய கருவூலமாக எண்ணி, இதனைப் பெறுவதற்கு, நம்மிடம் உள்ள அனைத்தையும் விற்று, இந்தக் கருவூலத்தைப் பெற வேண்டும் என்றும், இந்த அரிய கோடையை ஒவ்வொருநாளும் நாம் மீண்டும் மீண்டும் கண்டடையவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஆயர்களிடம் கூறினார்.
இலத்தீன் வழிபாடு, மற்றும் கீழை வழிபாட்டு முறை தலத்திருஅவைகளில் புதிதாக நியமனம் பெற்ற ஆயர்களுக்கு, ஆயர்கள் பேராயம் ஏற்பாடு செய்திருந்த ஒரு பயிற்சிப் பாசறையில் கலந்துகொள்ள, உரோம் நகருக்கு வந்திருந்த, ஏறத்தாழ 130 ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுடைய பாசறையின் இறுதியில் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.
ஆயர்களின் தெரிவும், நியமனமும், வெறும் மனித முயற்சிகளால் மட்டும் நடைபெறுவதில்லை, மாறாக, மேலிருந்து வரும் ஒரு தெரிவாக இது அமைந்துள்ளது என்பதை, தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இத்தகைய புனிதப் பணிக்கு நாம் வழங்கக்கூடிய பதிலிறுப்பு, முழுமையான அர்ப்பணம் என்று எடுத்துரைத்தார்.
ஆயராக பணியைத் துவங்கும் இவ்வேளையில், இறைவனை உங்கள் வாழ்வின் மையமாக்குங்கள் என்று, புதிய ஆயர்களிடம் வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன், கிறிஸ்து, அவரது சிலுவை ஆகியவை, உங்கள் வாழ்வைத் தாங்கி இருக்கட்டும் என்று கூறினார்.
நீங்கள் கேள்விப்படும் அவலமான செய்திகள், உங்கள் உள்ளங்களை உடைக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறியத் திருத்தந்தை, இறுதியில், சிலுவை வழியே நமக்கு வெற்றி உண்டு என்பதை, கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
ஆயர்களாகிய நாம் நம் புனிதத்துவத்தை, தனிப்பட்ட முறையில் பெறுவதில்லை, மாறாக, கிறிஸ்துவின் காயப்பட்ட உடல் வழியே, கிறிஸ்தவ சமுதாயத்துடன் நம்மையே இணைப்பதன் வழியே பெறுகிறோம் என்பதை, புதிய ஆயர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆயர்களாக நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தை, கசப்பாலும், வெறுப்பாலும் நிறைக்காமல், மகிழ்வுடன் மேற்கொள்ளுங்கள் என்ற ஆலோசனையுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய ஆயர்களுக்கு வழங்கிய உரையை நிறைவு செய்தார்

Comments are closed.