மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 13)

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்’

மிண்டி நார்டர் ஷா என்றொரு பெண்மணி இருந்தார். அவருக்கு பிரிட்கர் என்றொரு மகன் இருந்தான். ஒரே மகன் என்பதால் மிண்டி, பிரிட்கரை மிகவும் அன்பு செய்து வந்தார்.

2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் ஒருநாள், பதினோரு வயது நிரம்பிய பிரிட்கர் சாலையோராமாக நடந்துபோய்க்கொண்டிருந்தான். அப்போது கிரைக் மில்லர் என்ற இளைஞன் சாலையில் நின்றுகொண்டு வாணவேடிக்கைகள் வெடித்து விளையாடிகொண்டிருந்தான். அந்த வழியாக போய்வந்த பெரியவர்கள் எல்லாம் கிரைக் மில்லரிடம், ‘இது பொது மக்கள் அதிகமாக நடமாகக் கூடிய பகுதி. அதனால் நீ தயதுசெய்து ஓர் ஒராமாகப் போய் வாணவேடிக்கைகளைப் போடு” என்று எவ்வளவோ புத்திமதி சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவன் கேட்காமல் சாலையில் நின்று வாணவேடிக்கைகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு வாணவேடிக்கை வெடித்துச் சிதறி, சாலையோராமாகப் போய்க்கொண்டிருந்த பிரிட்கரின் வயிற்றுப்பகுதியைக் கிழித்து, அவனது முதுகுப் பகுதி வெந்துபோகச் செய்தது. இப்படிப்பட்ட ஒரு கோர சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, பிரிட்கரை அங்கிருந்தவர்கள் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். மருத்துவமனையில் அவனுக்குச் சிகிச்சை அளித்தபோது அவனுடைய உயிரைக் காப்பாற்ற முடிந்ததேயொழிய அவனுடைய உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றவே முடியவில்லை. இதனால் பிரிட்கர் அந்தத் தீயக் காயங்களோடு வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளானான்

இந்நிகழ்விற்குப் பிறகு பிரிட்கரின் தாயான மிண்டிக்கு அறிமுகமான பலர், அவரிடத்தில் வந்து, பிரிட்கரின் அந்த நிலைக்குக் காரணமான கிரைக் மில்லர்மீது வழக்குப் பதிவு செய்து, அவனுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்குமாறு வற்புறுத்தினார்கள். அதற்கு பிரிட்கரின் தாயாரோ, “நானும் என்னுடைய மகனும் கிரைக் மில்லரை என்றைக்கோ மன்னித்துவிட்டோம். இப்போது நாங்கள் செய்துகொண்டிருப்பதெல்லாம் அவனுக்காக இறைவனிடம் வேண்டுவதுதான்” என்றார். இதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இது நடந்து சில மாதங்கள் கழித்து, பிரிட்கரின் தாயார் அவனிடத்தில் கேட்டார், “என் அன்பு மகனே! உன்னுடைய இந்த நிலைக்கு காரணமான கிரைக் மில்லருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொன்னால், நீ அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பாய்?” பிரிட்கர் அதற்கு மிகவும் பொறுமையாகச் சொன்னான், “அவ்வாறு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நான் கிரைக் மில்லரிடம், ‘நீ ஊர் ஊராகச் சென்று வெடிபொருட்களின் தீமையைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து எனச் சொல்வேன்”. மகன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவனுடைய தாய் அவனை நினைத்து பெருமிதம் கொண்டார்.

இவ்வாறு பிரிட்கரும் அவனுடைய தாயான மிண்டியும் மிகப்பெரிய குற்றவாளியான கிரைக் மில்லரை மன்னித்து ஏற்றுக்கொண்டதால், அவன் குற்ற உணர்ச்சி மிகுதியால் தற்கொலை செய்யும் எண்ணத்தையே விடுத்தான்.

மன்னிப்புக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கும் பிரிட்கரிடமிருந்தும் அவனுடைய தாயிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியை ஏராளம் இருக்கின்றன.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்கும் தன் சீடர்களுக்கும் பல அறிவுரைகளைக் கூறுகின்றார். அவற்றில் ஒன்றுதான் ‘மன்னியுங்கள். மன்னிப்புப் பெறுவீர்கள்’ என்பதாகும். ஆண்டவர் இயேசு சொல்வது போன்று, நமக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நம்மால் பிரிட்கரைப் போன்று அவருடைய தாயாரைப் போன்று மன்னிக்க முடியுமா?. சற்றுக் கடினமான காரியமாக இருந்தாலும் இயலாத காரியமல்ல. ஏனென்றால் மன்னிக்கச் சொல்லும் நம் ஆண்டவர் இயேசுவே தன்னைச் சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பகைவர்களை மன்னித்தார். ஆகையால், மன்னிப்பது கடினமான காரியமாக இருந்தாலும் மன்னித்து வாழ்கின்றபோது நாம் இயேசுவைப் போன்று இறைவனைப் போன்று ஆகின்றோம் என்பது உறுதி.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” என்பார். எப்போது நாம் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருக்க முடியுமென்றால், நாம் நமக்கெதிராகத் தீமை செய்பவர்களை நாம் மன்னித்து வாழ்கின்றபோதுதான்.

ஓர் அறிஞர் சொல்வார், “வாழ்க்கை மகிழ்வாகி விடும், மன்னிப்புக் கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்”. எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவை. நாம் மன்னித்து வாழ்கின்றபோது நமது வாழ்க்கை மிகவும் அழகாகிவிடும்.

ஆகவே, நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று மன்னித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.