மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 12)

செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!

ஒரு சமயம் ஒரு முற்றும் துறந்த முனிவரும் கடவுளை நம்பாக ஒரு செல்வந்தரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர், “ஐயனே! கடவுளுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையையே துறந்துவிட்டீர்களே!. எவ்வளவு பெரிய ஆள் நீங்கள்?” என்றார். அதற்கு அந்தத் துறவி, “ஆமாம்! நான் கடவுளுக்காக என் வாழ்க்கையையே துறந்து துறவியாகிவிட்டேன். ஆனால் நீரோ என்னைவிடப் பெரிய துறவியாகி விட்டீர்!” என்றார்.

அதைக் கேட்ட செல்வந்தர் திடுக்கிட்டார். “உங்களைவிட நான் பெரிய துறவியா? எப்படி?” என்று குழப்பத்துடன் கேட்டார் செல்வந்தார். “ஐயா! நானாவது கடவுளுக்காக என் வாழ்க்கையைத்தான் துறந்தேன். நீரோ உம் சுகபோக வாழ்க்கைக்காக எல்லாம் வல்ல கடவுளையே துறந்துவிட்டீர். அப்படியானால் என்னைவிட நீர்தானே பெரிய துறவி” என்றார் அந்த முற்றும் துறந்த துறவி. அதைக் கேட்ட நாத்திக செல்வந்தரால் எதுவும் பேச முடியவில்லை.

தம்மைப் படைத்த கடவுளையே மறப்பவர்கள் செல்வந்தர்கள். அப்படிப்பட்டவர்களால் எப்படி இறைவனின் அரசை உரித்தாக்கிக் கொள்ளமுடியும்?.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினுடைய சமவெளிப் பொழிவைக் குறித்து வாசிக்கின்றோம். இது மத்தேயு நற்செய்தியில் வரக்கூடிய மலைப்பொழிவை விடவும் சற்று வித்தியாசமானது. மத்தேயு நற்செய்தியில் வரக்கூடிய மழைப்பொழிவு மூன்றாம் நபருக்குச் சொல்லப்படுவது போல் இருக்கும். ஆனால் லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற சமவெளிப் பொழிவோ இயேசு நேரடியாகப் பேசுவது போன்று இருக்கும். இப்போது ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய ‘செல்வர்களே ஐயோ உங்களுக்குக் கேடு’ என்பதை எடுத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு செல்வர்களுக்கு எதிராக இப்படியோர் கண்டனக் குரலைப் பதிவு செய்கின்றார் என்றால் அதில் அர்த்தமில்லாமல். இயேசு வாழ்ந்து வந்த யூத சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு அதிகமாகவே இருந்தது. பணக்காரர்கள் மிகவும் வசதியோடு வாழ்ந்து வந்தார்கள். இதற்கு நேர் எதிராக ஏழைகள் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவந்தார்கள். சமூகத்தில் இப்படியோர் ஏற்றத்தாழ்வு இருந்தபோதும் அதனைப் போக்க பணக்காரர்கள் எந்தவொரு முயற்சியும் செய்யாதத்தைக் கண்டுதான் இயேசு அவர்களுக்கு எதிராகத் தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவு செய்கின்றார்.

இயேசு செல்வந்தர்களை இப்படிக் கடினமாகப் பேசுவதற்கு, அவர்கள் செய்த முதல் தவறு, அவர்கள் கடவுளை மறந்து வாழ்ந்து வந்ததுதான். நம்மிடத்தில்தான் எல்லா வசதி வாய்ப்பும் இருக்கின்றதே. அப்புறம் எதற்கு நாம் கடவுளை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று செல்வந்தர்கள் இருந்தார்கள். எடுத்துக்காட்டாக இயேசு சொல்லக்கூடிய அறிவற்ற செல்வந்தன் உவமையில் வரக்கூடிய செல்வந்தனோ, தன்னுடைய நிலம் நன்றாக விளைந்திருக்கின்றதே, அதற்காக இறைவனுக்கு செலுத்தவேண்டுமே என்றெல்லாம் நினைக்கவில்லை. மாறாகத் தன்னுடைய களஞ்சியத்தை இடித்துப் பெரிதாக்கவேண்டும் என்றுதான் நினைத்தான். அதனாலேயே அவன் அழிவைச் சந்தித்தான். அனைத்தையும் கொடுத்து, ஆசிர்வதித்த ஆண்டவனை மறந்து வாழ்பவனுக்கு அகிலத்தில் இடமேது?.

பணக்காரர்கள் செய்த இரண்டாவது தவறு, அவர்கள் சக மனிதர்களை மறந்து வாழ்ந்து வந்ததாகும். இறைவன்தான் தங்களுக்கு ஏராளமாகத் தந்திருக்கின்றாரே, அதில் சிறிதளவாவது ஏழைகளுக்குத் தரவேண்டும் என்று அவர்கள் சிறிதளவேனும் நினைக்கவில்லை. அதனாலும் அவர்கள் இயேசுவின் கடுஞ்சொல்லுக்கு உள்ளாகின்றார்கள். இயேசு சொல்லக்கூடிய பணக்காரன் ஏழை இலாசர் உவமையில் வரும் பணக்காரன் அனுதினமும் அறுசுவை உணவை உண்டு, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனால், அவன் தன் வாசல்படியில் நோயுற்றுக் கிடந்த ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் அவன் இறந்தபிறகு நரகத்திற்கும் வாழ்நாள் எல்லாம் துன்பத்தை அனுபவித்த இலாசர் விண்ணகத்திற்கும் செல்கின்றார். சக மனிதனை அன்பு செய்யாமல் சர்வேசுரனை எப்படி அடைய முடியும்?.

பணக்காரர்கள் செய்துவந்த மூன்றாவது தவறு அவர்கள் உண்மை, நீதி, இரக்கம், அன்பு போன்ற பண்புகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான். இவர்கள் ஆண்டவனையும் அடுத்தவரையும் மதித்திருந்தால்தான்தானே அன்புக்கும் இன்ன பிறவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். இவர்கள்தான் எப்போதும் பணம் பணம் என்று வாழ்ந்தவர்கள் ஆயிற்றே!. அப்புறம் எப்படி ஆண்டவரையோ அடுத்தவரையோ நினைத்துப் பார்த்திருப்பார்கள்?.

இயேசு செல்வர்களுக்கு எதிரானவர் அல்ல, செல்வத்தினால் வரும் தீமைக்குத்தான் எதிராக இருக்கின்றார். செல்வர்கள் தங்களிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்கின்றபோது அவர்களும் ஆண்டவரின் அரசில் இடம்பிடிப்பார்கள் என்பது உறுதி.

ஆகவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசிர்வாதங்களை, செல்வத்தை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம், தன்னலத்தை விடுத்து பொதுநலத்தை நாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

Comments are closed.