மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 11)

ஜெபிக்கும் இயேசு!

ஏராளமான புனிதர்களுடைய வாழ்க்கை வரலாற்றை வியக்கத்தக்க வகையில் எழுதியர் ஹென்றி கியோன் (Henri Gheon) என்பவர். அவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த புனித ஜெர்மைன் காசின் என்பவருடைய வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்கின்ற நிகழ்வு இது.

ஜெர்மைன் காசினின் குடும்பமோ சாதாரண ஏழைக் குடும்பம். அவருடைய பெற்றோரால் அவரைப் படிக்கவைக்க முடியாத நிலை. இதனால் அவர் ஆடு மேய்த்து குடும்பத்திற்கு ஒத்தாசை புரிந்து வந்தார். சில சமயங்களில் வீட்டில் உணவுகூட சமைத்திருக்க மாட்டார்கள் (பணம் இருந்தால்தானே உணவு சமைக்க முடியும்) அதனால் அவர் சாப்பிடாமலே ஆடு மேய்க்கக் கிளம்பிவிடுவார். போகும் இடத்தில் பசியெடுக்கும், தாகமெடுக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடுங்குளிர் அவரை வாட்டி வதைக்கும். அப்போதெல்லாம் அவர் முழந்தாள் படியிட்டு ஜெபிக்கத் தொடங்கிவிடுவார், “இயேசுவே! இங்கு கடுமையாகக் குளிர் அடிக்கின்றது, பசியும் தாகமும் எடுக்கின்றது. இங்கு நிலவுகின்ற குளிரும் என்னுடைய பசியும் தாகமும் நீங்கும்படி செய்யும்”.

இவ்வாறு அவர் முழந்தாள் படியிட்டு ஜெபித்த பின்பு அங்கிருக்கும் குளிர் மறைந்து, இதமான சூழல் ஏற்படும். அவருக்கு இருந்த பசியும் தாகமும் காணாமல் போய்விடும். இவ்வாறு அவர் வலிமை பெற்று, தன்னுடைய வேலையைத் தொடந்து செய்வார்.

புனித ஜெர்மைன் காசினின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு ஜெபம் சாதாரண ஒரு சடங்கு கிடையாது. ஒரு வலுக்குறைந்தவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றி, அவர்களுடைய வாழ்விற்கு புது வழியைக் காட்டும் என்பதை அழகாக எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்று, அங்கு இரவெல்லாம் இறைவனிடத்தில் தன்னுடைய நேரத்தைச் செலவழித்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு கிறிஸ்து சாதாரணமானவர் அல்ல, அவர் இறைமகன், தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அப்படியிருந்தபோதும் அவர் இறைவனிடத்தில் வேண்டுவதற்கு தன்னுடைய நேரத்தைச் செலவழித்தார் என்பது, ஜெபம் அவருடைய வாழ்வில் எந்தளவுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கின்றது என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஆண்டவர் இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏன் முக்கியமான நிகழ்வின் முன்பாகவும் ஜெபித்தார் என்று நற்செய்தி நூல் நமக்குச் சான்று பகர்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து இரவெல்லாம் இறைவனிடத்தில் ஜெபித்துவிட்டு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். திருத்தூதர்கள்தான் தனக்குப் பின்பு, தான் உருவாக்க இருக்கும் திருச்சபையை கட்டி வழிநடத்தப் போகிறவர்கள். ஆகவே அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்? யாராரைத் தேர்ந்தெடுத்தால் திருச்சபை வளம்பெறும் என்பதை எல்லாம் உணர்ந்து, அவர் இறைவனிடத்தில் வேண்டுகின்றார். அவர் வேண்டியவாறே பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசுவைப் போன்று நமது வாழ்விலும் நாம் எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் அதனை ஜெபம் செய்து தொடங்கினால் அதில் நிரம்ப ஆசிர்வாதம் உண்டு என்பது உறுதி.

இன்றைய நற்செய்தியில் வாசகத்தில் நாம் வாசிக்கக்கூடிய இன்னொரு செய்தி, ஆண்டவர் இயேசு ஜெபம் செய்து சீடர்களைத் தேர்ந்தெடுத்த பின்பு மக்கள் மத்தியில் சென்று, அவர்களிடத்தில் பணி செய்தார் என்பதாகும். நம்முடைய ஜெபம் நம்மை பணிவாழ்விற்கு உந்தித் தள்ளவேண்டும் என்பதை இது நமக்கு ஆழமாக எடுத்துச் சொல்கின்றது. ஆண்டவர் இயேசு மலையில் இருந்து ஜெபித்து, அப்படியே அங்கு இருந்துவிடவில்லை. அவர் மலையிலிருந்து இறங்கி, சமவெளிக்குப் பகுதிக்கு அதாவது மக்கள் இருக்கக்கூடிய பகுதிக்கு வந்து, அவர்களுக்குக் மத்தியில் பணி செய்கின்றார்; பலருடைய பிணியைக் குணமாக்கி, நலம் தருகின்றார்.

இயேசுவின் இச்செயலை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கிறிஸ்தவ வாழ்வு அல்லது மனித வாழ்வு என்பது ஜெபத்திற்குள்ளோ அல்லது சாத்திர சம்பிரதாயங்களுக்கு உள்ளோ முடங்கிவிடக்கூடிய ஒன்று அல்ல, அது மக்கள் பணிக்கு நம்மை உந்தித் தள்ளவேண்டும். மக்கள் பனியில்லாத வழிபாடும் ஜெபமும் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதனால் தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுகின்றார், “செயல்வடிவம் பெறாத எந்த நம்பிக்கையும் தன்னிலே உயிரற்றது” என்று. ஆம், இதுதான் உண்மை. நாம் செய்யும் ஜெபம் நம்மை செயலுக்கு உந்தித் தள்ளவேண்டும். அதேநேரத்தில் நாம் செயல்படுவதற்கான வலுவினை ஜெபம் தரக்கூடியதாய் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையே இயேசு விரும்பும் வாழ்வு.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஜெப மற்றும் செயல்வீரர்களாக மாறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.