ஏழை எளியோரை ஒதுக்கி வைக்கும் அச்சத்தை வெற்றி கொள்ளுதல்

துன்புறும், மற்றும், உதவித் தேவைப்படும் நம் சகோதரர், சகோதரிகளுக்கு நம் இதயங்களைத் திறந்து, நம் சுயநலப் போக்குகளைக் கைவிட வேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவருக்கு இயேசு குணமளித்த புதுமைப் பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டி தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த குணமாக்கல் நிகழ்வின்போது, இயேசு அவரை தனியாக அழைத்துச் சென்று குணப்படுத்தியது, நற்செயல்கள், புகழுக்காக அல்லாமல் பிறருக்கு உதவுவதற்காகவும், அதேவேளை, ஆடம்பரமில்லாமல் அமைதியாக ஆற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் உள்ளது என்றார்.
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, பின்னர் குணமளித்தார் என்பது, தந்தையாம் இறைவனோடு இயேசு கொண்டிருந்த ஒன்றிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும், ‘எப்பத்தா’, அதாவது, ‘திறக்கப்படு’ என அவர் உரைத்தது, குறைப்பாடுடன் வந்தவருக்கு குணம் மட்டும் வழங்கவில்லை, மாறாக, ஏனையோருக்கும், இவ்வுலகுக்கும் திறந்த மனம் கொண்டவராக அவர் செயல்படவும் உதவியது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“தன் மூவேளை செப உரையின்போது, இருவிதமான குணம்பெறுதல் பற்றிக் குறிப்பிட்டத் திருத்தந்தை, ஒன்று உடலளவில் குணம்பெறும் புதுமை என்றும், இரண்டாவது, மனதளவில், அதாவது உதவித் தேவைப்படுவோரை, அச்சத்தால், ஒதுக்கி வைக்கும் போக்கிலிருந்து குணம் பெறுவதையும் பற்றிக் குறிப்பிட்டார்.
நோயாளிகளும் துன்புறுவோரும் எழுப்பும் குரல்களுக்கு நாம் காது கேளாதவராகவும், ஊமையாகவும் செயல்பட்டு, அவர்களை ஒரு சுமையாக நோக்குகிறோமேயொழிய, அவர்கள் மீது சமூகத்தின் அக்கறையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாக இதனை நாம் நோக்கத் தவறுகிறோம் என குறிப்பிட்ட திருத்தந்தை, மற்றவர்கள் மட்டில் திறந்த உள்ளம் கொண்டவர்களாக செயல்படவேண்டும் என்பதை ‘திறக்கப்படு’ என்ற வார்த்தை வழியாக இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.