இரட்டை வேட வாழ்க்கைக்கு நற்செய்தி அனுமதி அளிப்பதில்லை

புனித பவுல் இரட்டை வாழ்க்கை வாழும் கொரிந்தியர்களை கடிந்துக் கொள்வதைக் காணும் நாம், ஒழுக்கச் சீர்கேடுகள் குறித்து பாராமுகமாக இருக்க முடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திஙகள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் புதியத்தன்மை என்பது, உள்ளம், உடல், ஆவி, தினசரி வாழ்வு என அனைத்திலும் ஒரு புளிக்காரமாக உள் நுழைந்து மாற்றியமைப்பதாகும், ஏனெனில், உலகம் கொணரும் புதியவைகளுக்கும் இயேசு கொணர்ந்த புதியவைகளுக்கும் இடையே மிகப்பெரும் முரண்பாடுகள் உள்ளன என்றார்.
இவ்வுலகம் முன்வைக்கும் புதியவைகளை ஏற்றுவாழும் மக்கள் உலகப்போக்குடையவர்கள் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவீனமானவர்களாக நாம் இருப்பது இயல்பு, ஆனால், வெளிவேடக்காரர்களாக செயல்படுதல் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
நம் பாவங்களை மன்னிக்கவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்ற புதிய கூற்றை நற்செய்தி வெளிப்படுத்துவதால், நம் பலவீனத்தையும் பாவநிலைகளையும் புரிந்து நாம் ஏற்றுக் கொள்ளும்போது, இறைவன் மன்னிக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம், ஆனால், நாம் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொண்டே உலகின் வழிகளில் நாட்டமுடையவர்களாக வாழும்போது, அது வெளிவேடமாகிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வலக்கை சூம்பியவருக்கு குணமளித்த புதுமையைப் பற்றிக்கூறும் இன்றைய நற்செய்தியைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, இப்புதுமையின் இறுதியில், பரிசேயரும், மறைநூல் அறிஞரும், இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதைச் சுட்டிக்காட்டி, நம் வாழ்விலும் இயேசுவைப் பின்பற்றுவதற்கான வழி, மறைசாட்சிய வாழ்வேயாகும், அது இரத்தம் சிந்துதலாக இருக்கத் தேவையில்லை, மாறாக, ஒவ்வொரு நாள் வாழ்விலும் இடம்பெறும் மறைசாட்சியமாகும் எனவும் கூறினார்

Comments are closed.