மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 10)

மரபுகளுக்கு அல்ல, மனிதர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் இயேசு!

ஓர் ஊரில் முதியவர் ஒருவர் இருந்தார். அவர் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டார். இந்நிலையில் ஊருக்கு வெளியே இருக்கும் புத்தமடத்திற்குச் சென்றால், அங்கு இருக்கும் துறவிகள் ஏதாவது தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அங்கு சென்றார்.

முதியவர் புத்தமடத்திற்குச் சென்ற நேரத்தில் மடத்தின் தலைவர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய தோற்றமோ மிகவும் எளிமையாக இருந்தது. முதியவர் அவரிடத்தில் சென்று தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் எடுத்துச் சொல்லி, கதறி அழுதார். அவருடைய அழுகையைப் பார்த்து மனமுருகிப் போன மடத்தின் தலைவர், “ஐயா பெரியவரே! உமக்குக் கொடுப்பதற்கு என்று என்னிடத்தில் பெரிதாக எதுவும் இல்லை. ஆனாலும் என்னால் முடிந்ததைத் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனவர், மரத்தாலான ஒரு சிறிய புத்தர் சிலையை எடுத்துக்கொண்டு வந்து, அதனை அவரிடத்தில் கொடுத்து, “இதைக் கொண்டுபோய் சந்தையில் விற்றால் உங்களுக்கு ஓரளவு பணம் கிடைக்கும். அதைக் கொண்டு நீங்கள் உங்கள் பசியாற்றிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். பெரியவரும் அதை நன்றிப் பெருக்கோடு வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மடத்தில் இருந்த மற்ற துறவிகள், மடத்தின் தலைவரிடத்தில் வந்து, “யாரோ ஒருவருக்கு புத்த சிலையை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்களே? இந்த மடத்தின் தலைவராக இருந்துகொண்டு புத்த சிலையை எடுத்துக் கொடுத்திருப்பது எவ்வளவு பெரிய பாவம்?” என்று அவரிடத்தில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மடத்தின் தலைவர், “முன்பொரு சமயம் டாங்கா என்ற துறவி, பயணி ஒருவர் குளிரால் நடுங்குகிறார் என்பதற்காக, அவருடைய குளிரைப் போக்குவதற்காக மடத்தில் இருந்த புத்த சிலையை எடுத்து எரித்ததைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?… நான் (உயிரற்ற) புத்த சிலையை எரிக்கவில்லை. அதை உயிருள்ள ஒரு மனிதனுடைய பசியைப் போக்குவதற்குத்தானே கொடுத்தேன்” என்றார்.

அதுவரைக்கும் சண்டை பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தவர்கள் அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அமைதியானார்கள்.

உயிருள்ள ஒரு மனிதனுக்காக, உயிரற்ற புத்த சிலையை எடுத்துகொடுத்த அந்த புத்த மடத்தின் தலைவரது செயல் மரபுகளை விடவும் மனிதர்கள் மேலானவர்கள் என்பதை நமக்கு அழகாக எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக் கூடத்திற்குச் சென்று, அங்கு போதிக்கத் தொடங்குகின்றார். அவ்வாறு அவர் போதிக்கின்றபோது அங்கே கைசூம்பிய மனிதர் ஒருவர் இருக்கின்றார். அவருடைய நிலையைக் கண்டு, இயேசு அவருக்கு நலமாளிக்கின்றார். ஆண்டவர் இயேசு அந்த கைசூம்பிய மனிதரைக் குணப்படுத்திய நாளோ ஓய்வுநாள். இதனால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்கள், ஓய்வுநாளில் இயேசு எப்படி குணப்படுத்தலாம் என்று முணுமுணுக்கிறார்கள். ஆண்டவர் இயேசுவோ, ஓய்வுநாள் நல்லது செய்யப் படைக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லி அவர்களின் வாயை அடைக்கின்றார்.

ஆண்டவர் இயேசு செய்த இந்த வல்ல செயல் நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. ஒன்று இயேசுவின் பரிவுள்ளம். விவிலிய அறிஞராக ஜெரோம், நற்செய்தியில் வரும் இந்த கைசூம்பிய மனிதர், செங்கல் சூளையில் வேலைசெய்தவர் என்றும் அவர் வேலை பார்க்கும் அவருடைய கை பாதிக்கப்பட்டது என்றும் அதனால் அவருடைய குடும்பம் மிகப் பெரிய நெருக்கடிச் சந்தித்து வந்தது என்றும் கூறுவார். இயேசு அந்த மனிதருடைய நிலையை அறிந்து, அவருக்கு நலம் தந்து அவரை முந்தைய நிலைக்குக் கொண்டு வருகின்றார். இவ்வாறு அவரைக் குணப்படுத்தியதன் மூலமாக அவருடைய குடும்பத்திற்குக் நல்ல வழி காட்டுகின்றார்.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் செய்தி, நல்லது செய்பவர்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்டாவிட்டால் கூட பரவாயில்லை. அவர்களுக்கு உபத்திரம் செய்யாது இருப்பது நல்லது என்பதாகும். நற்செய்தியில் கைசூம்பிய மனிதர் பல ஆண்டுகளாக அவ்வாறு இருப்பதைக் கண்டபோதும் பரிசேயக்கூட்டம் அவருக்கு ஒரு நன்மையையும் செய்யவில்லை. எப்போது இயேசு அவரைக் குணப்படுத்தினாரோ அப்போதே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்குகின்றார்கள். அவர்கள் நன்மை செய்ய முன்வரவில்லை, ஆனால் நன்மை செய்பவர்களுக்கு முட்டுக்கட்டை போடத் தயாராக இருந்தார்கள். நாம் பரிசேயர்களைப் போன்று இல்லாமல், இயேசுவைப் போன்று இருப்பது நல்லது.

ஆகவே, நாம் இயேசுவைப் போன்று துன்புறுவோர்மீது அன்பும் அக்கறையும் கரிசனையும் கொண்டு வாழ்வோம். அடுத்தவருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடாதிருப்போம். எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.