அனைவருக்கும் அடைக்கலநாயகி இணையத்தளம் சார்பாக விண்ணக அரசியின் பிறந்த திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
உலக உயிர்களின் பாவத்தை எல்லாம் மன்னிக்க தனது குமாரனை அனுப்பி வைக்க சித்தமானார் பரமபிதா. தேவகுமாரனின் ரத்தமே உலக உயிர்களை ரட்சிக்கும் என்று கருதி அவரை இஸ்ரவேலர் பூமிக்கு அனுப்ப ஆயத்தமானார். இறைமகனை வளர்க்கவும் பாதுகாக்கவும் ஒரு தியாகமே வடிவான மரியாவை தேர்ந்தெடுத்து அவரிடம் இறைத்தூதர் கெபிரியேலை அனுப்பினார். அப்போது மரியாவுக்கும் ஜோசப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. திருமணமே நடைபெறாத சூழலில் இறைமகனான இயேசுவின் திருவுருவை கன்னி மரியா தாங்கினார். சொல்லொணாத துயரங்களுக்கு இடையே தேவமாதா தேவமைந்தன் யேசுபிரானை ஈன்றெடுத்தார். அன்றிலிருந்து மண்ணகத்தின் எல்லா உயிருக்கும் ‘மாதா’ வானார்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் தாவீதின் குடும்பத்தின் வழிவந்த ஒரு ஏழை வீட்டில் செப்டம்பர் 8-ஆம் நாள் மரியா பிறந்தார். இவர் நாசரேத் அல்லது ஜெருசலேமில் பிறந்தார் என்று இருவித கருத்துகள் நிலவுகின்றன. இவரது பிறந்த நாள் குறித்த சுவையான தகவல் ஒன்று இங்கு சொல்ல வேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 8 -ம் தேதி மிகச்சரியாக ரோம் நகரத்து தேவாலயம் ஒன்றில் இனிய இசை ஒலிக்குமாம். கேட்பவரைக் கிறங்க செய்யும் அந்த ஒலியைக் கேட்டு மகிழ்ந்த ஒரு துறவி குழம்பினார். இந்த இசை எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் ஆண்டவரிடம் இதைப்பற்றி விளக்குமாறு வேண்டினார். அப்போது ஆண்டவர் அசரீரியாக அது மேரி மாதாவின் பிறந்தநாள் என்று விளக்கினார். தேவமாதாவின் பிறந்த நாளில் விண்ணகத்தில் வான தூதர்கள் பிறந்த நாள் விழா எடுத்துப் பாடுவதையும் சொன்னார். அதன்படியே அன்றிலிருந்து செப்டம்பர் 8-ம் நாள் தேவமாதாவின் பிறந்த நாளாக உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. அன்னையின் பிறப்புத் திருநாள் எல்லோருக்கும் அமைதியைத் தரட்டும்.
Comments are closed.