கழுத்துச் சங்கிலியில்
தங்கச் சிலுவை சுமப்பவர்களுக்கு
மரச் சிலுவையின்
பாரம் புரிவதில்லை.
மத விற்பன்னர்கள்
புனித நூல்களைப் படிப்பதைவிட
விற்பதையே அதிகம் விரும்புகிறார்கள்..
ஆன்மீகவாதிகளோ
ஆயிரம் பேருக்குத் தெரிவித்துத் தான்
ஆறு பேருக்கு
அன்னதானம் செய்கிறார்கள்.
பாவம் பரமன்,
இன்னும் சிலுவையில்
பாவிகளை மன்னிக்கச் சொல்லி
தொடர்ந்து மனுச்செய்கிறார்.
மதமோ
பாவிகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.
மனிதமும், மன்னிப்பும்
ஆலயத்துள் பெறப்பட்டு
ஆலயத்துக்குள் விவாதிக்கப்பட்டு
ஆலயத்துக்குளே விட்டுச் செல்லப் படுகிறது.
காய்கள் கனியாகும்
எனும் நம்பிக்கையில்
சிலுவை மட்டும் இன்னும் காயவில்லை.
கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்,
இன்னும்
சிலுவை கதறிக் கொண்டிருக்கிறது
காதுகளைக் கழற்றிவிட்ட மனிதர்களைப் பார்த்து.
ஞா.சிங்கராயா் சாமி
கோவில்பட்டி.
Comments are closed.