பாத்திமா திருத்தலத்தில் கர்தினால் ஸ்டெல்லா வழங்கிய மறையுரை
தற்போது கத்தோலிக்கத் திருஅவையை வேதனையில் ஆழ்த்தியிருக்கும் பாலியல் தொடர்பான குற்றங்கள் என்ற கறையிலிருந்து, திருஅவையை சுத்தம் செய்வதற்கு, திருமுழுக்கு பெற்ற அனைவரின் ஆதரவும், செபங்களும் இன்றியமையாதவை என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், தன் மறையுரையில் கூறினார்.
செப்டம்பர் 3, இத்திங்கள் முதல், 6 இவ்வியாழன் முடிய போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலத்தில் நடைபெறும் அருள்பணியாளர்கள் மாநாட்டின் துவக்கத் திருப்பலியை நிறைவேற்றிய, அருள்பணியாளர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் பெனியமீனோ ஸ்டெல்லா அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
அதிகாரத்தையும், சக்தியையும் வெளிப்படுத்தும் ஆயர்கள், அருள்பணியாளர்கள் என்ற கோணத்தில் மட்டுமே, கத்தோலிக்கத் திருஅவை உணரப்பட்டதால், அதிகாரத்தில் இருப்போர் செய்த தவறுகளும் மூடி மறைக்கப்பட்டன என்றும், திருஅவை, மக்களின் அவை என்ற உணர்வு வளர்வதே, இத்தகைய தவறுகளைத் தீர்க்கும் என்றும், திருத்தந்தை கூறிவந்துள்ள கருத்துக்களை, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
உலகெங்கும் பல்லாயிரம் அருள்பணியாளர்கள், இறைவனுக்கும், மக்களுக்கும் ஒப்பற்ற பணிகள் செய்துவருவதை மறந்துவிடக்கூடாது என்பதை, தன் மறையுரையில் தெளிவுபடுத்திய கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், அருள்பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் இன்னும் தீவிரமான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதையும் வலியுறுத்தினார்.
Comments are closed.