புனித அன்னை தெரேசாவின் திருநாளன்று, சிறப்புத் திருப்பலி

செப்டம்பர் 5, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித அன்னை தெரேசாவின் திருநாளையொட்டி, கொல்கத்தா பேராயர் தாமஸ் டி’சூசா அவர்களின் தலைமையில், அன்னை தெரேசாவின் கல்லறைக்கருகே கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
அருள்பணியாளர்களின் புனிதத்துவத்தை வளர்ப்பதற்காக, அன்னை தெரேசா அவர்களால் உருவாக்கப்பட்ட ‘Corpus Christi’ என்ற இயக்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள், பேராயருடன் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.
இப்புதன் காலை 6 மணியளவில் நடைபெற்ற இத்திருப்பலியைத் தொடர்ந்து, அன்னையின் கல்லறைக்கருகே நடைபெற்ற ஒரு நிகழ்வில், அன்னை தெரேசா பிறரன்பு சகோதரிகள் சபையின் தலைவர், அருள் சகோதரி மேரி பிரேமா அவர்கள், இச்சபையின் ஐந்து பிரிவுகளைக் குறிக்கும் வண்ணம், ஐந்து மெழுகு திரிகளை ஏற்றிவைத்தார்.
வறியோரும், உலகத்தால் ஒதுக்கப்பட்டோரும் குடும்பங்கள் இன்றி தவித்து வந்த நிலையில், அவர்களை ஒரு குடும்பமாக இணைக்கும் பொறுப்பு, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபைக்கு அளிக்கப்பட்டது என்று கூறிய அருள் சகோதரி பிரேமா அவர்கள், அன்னை தெரேசாவால் உருவாக்கப்பட்ட உலகளாவிய குடும்பம், என்றும் பிரியாமல் இருப்பது, அன்னைக்கு வழங்கப்படும் மரியாதை என்று எடுத்துரைத்தார்.
1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, அன்னை தெரேசா அவர்கள், இறைவனடி சேர்ந்த தருணம் முதல், அவரது கல்லறை அமைந்துள்ள இல்லம், உலகினர் பலர் திருப்பயணம் மேற்கொள்ளும் தலமாக அமைந்துள்ளது.

Comments are closed.