வெளிவேட நிலைகளிலிருந்து வெளிவருவோம்

சடங்கு முறைகளையும் சட்ட முறைகளையும் வெளிவேடக்காரர்களாக பின்பற்றி வருவதிலிருந்து நமக்கு விடுதலை வழங்கி, நம் விசுவாச அனுபவத்தின் மையம் கடவுளின் அன்பு, மற்றும், பிறரன்பு என்பதை கண்டுகொள்ள, இயேசு அழைப்பு விடுக்கிறார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடும் வெளிவேடக்காரர் என்ற பதம் குறித்து, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதப் பாரம்பரியங்களைக் கடைபிடிப்பதற்காக, கடவுளின் கட்டளைகளையும் அவர் விருப்பத்தையும் புறந்தள்ளும் மதத் தலைவர்களை நோக்கி இந்த வார்த்தைகளை இயேசு பயன்படுத்தினார் என்றார்.
இன்றைய உலகின் உண்மை நிலைகளுக்கு நம்மைத் திறந்தவர்களாக, இவ்வுலகில் கடை நிலையில் உள்ள மக்களுக்கு இயேசுவைப்போல் நாமும் உதவ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மனப் போக்குகளால் நாம் கறைபடாமல் இருக்க வேண்டுமெனில், நம்மில் வெளிப்புறமாக அல்ல, மாறாக, உட்புறமாக ஒரு மாற்றம் தேவை என்பதையும் வலியுறுத்தினார்.
தற்பெருமை, பேராசை மற்றும் செருக்குடன் வாழ்ந்துகொண்டே, தன்னை மதப்பற்றாளன் என காட்டிக்கொள்ள விரும்புபவரையே இயேசு இங்கு வெளிவேடக்காரர் என அழைக்கிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தையை நாம் எவ்வாறு நம் இதயத்தில் வரவேற்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்ப்போம், ஏனெனில், நம் இதயத்தில் முளைவிட்டு வளரும் இந்த விதையே நம் வெளிவேடத்தனங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.