பூமியை மதிக்காவிடில் மனிதகுலத்திற்கு எதிர்காலம் இல்லை

றைவனின் படைப்பை, சுரண்டும் பொருளாகும் மாற்றுகின்ற, அதைத் தவறாகப் பயன்படுத்துகின்ற மற்றும் அழிக்கின்ற எல்லாவிதமான நடவடிக்கைகளும், கிறிஸ்தவ நற்செய்தியின் உணர்வுக்கு முரணானவை என்று, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் எச்சரித்துள்ளார்.

செப்டம்பர் 1, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாளுக்கு செய்தி வெளியிட்டுள்ள, முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், இறைவனின் படைப்பைப் பாதுகாப்பதற்கு, கிறிஸ்துவை மையப்படுத்திய கல்வித் திட்டங்கள் நம் இளையோர்க்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்தவ சபை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நாளை ஆரம்பித்து 29 ஆண்டுகள் கடந்துவிட்டன என்றுரைத்துள்ள முதுபெரும்தந்தை அவர்கள், வரலாற்றில், மனித சமுதாயத்தின் பயணத்தில், இந்த உலகு, வாழ்வதற்கேற்ற உண்மையான இல்லமாக மாற்றப்படும் திட்டம் இணைக்கப்படாவிட்டால், அப்பயணத்தில் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றே சொல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வுக்கு மிகவும் முக்கியமான, அதேநேரம், மனிதசமுதாயத்தின் வருங்காலத்திற்கு  மிகவும் அடிப்படையான சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டு, மனிதர் மீது உண்மையான அக்கறை காட்டுவது இயலாதது என்றும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்களின் செய்தி கூறுகின்றது.

சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்கும் ஒருங்கிணைந்த திட்டங்களும், விழிப்புணர்வும், கிறிஸ்தவ சபையின் நடவடிக்கைகளில் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவராக, 1989ம் ஆண்டு பணியாற்றிய, முதுபெரும் தந்தை திமித்ரியோஸ் (Dimitrios) அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உலக செப நாளை, கத்தோலிக்க திருஅவையின் செப நாளாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு அறிவித்தார்

வத்திக்கான் செய்திகள்

Comments are closed.