மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 03) ‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் எற்றுக்கொள்ளப்படுவதில்லை

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, கடுமையான போட்டி நிலவியது. அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் சிறிதுகூட நாகரீகம் இல்லாமல் ஆபிரகாம் லிங்கனைப் பார்த்து கடுமையாகச் சாடினார்.

“உங்களை எனக்குத் தெரியாதா? நீங்கள் சாராயக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவராயிற்றே” என்றார் அவர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆபிரகாம் லிங்கனை திகைப்போடு பார்த்தனர். ஆபிரகாம் லிங்கன் பொறுமையுடன் கூட்டத்தினரைப் பார்த்தார். பிறகு அமைதியாக அந்த வேட்பாளரைப் பார்த்து, “நண்பரே! நான் சாராயக் கடையில் வேலை பார்த்தது உண்மைதான், நான் டோக்கன் வழங்கும் கவுண்டரின் உட்பக்கம் நிற்கும்போது, நீங்கள் கவுண்டரின் முன்பக்கம் நின்றுகொண்டிருப்பீர்களே, அதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்” என்றார்.

அதைக் கேட்டதும் எதிர்க்கட்சி வேட்பாளர் தலைகுனிய, மக்கள் பலத்த கைதட்டல் எழுப்பினர். தேர்தலில் ஆபிரகாம் லிங்கனையே வெற்றிபெறச் செய்து அமெரிக்காவின் அதிபர் ஆக்கினர்.

தேர்தலில் ஆபிரகாம் லிங்கனை எதிர்த்து நின்றவர் எப்படி அவரை, ‘உங்களை எனக்குத் தெரியாதா? நீங்கள் சாராயக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவராயிற்றே’ என்று சொல்லி புறக்கணித்தாரோ, அவரை எள்ளி நகையாடினரோ, அது போன்று நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன் சொந்த ஊரில் போதிக்கும்போது அவருடைய ஊர்க்காரர்கள் அவரை, ‘இவர் யாரென்று தெரியாதா? இவர் யோசேப்பின் மகன்தானே?’ என்றுசொல்லி அவரைப் புறக்கணிக்கின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என்கின்றார்.

இயேசுவின் சொந்த ஊர்க்காரர்கள் அவரைப் புறக்கணித்தற்குக் காரணமென்ன, இயேசு அந்தப் புறக்கணிப்புகளை எல்லாம் எப்படி எதிர்கொண்டு வெற்றிவீரராய் வளம்வந்தார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை அவருடைய சொந்த ஊர்காரர்கள் புறக்கணித்தற்கு முதலாவது காரணம் அவருடைய குடும்பப் பின்னணி. இயேசுவின் குடும்பம் வசதியான குடும்பம் கிடையாது. அவருடைய வளர்ப்புத் தந்தையோ தச்சுத் தொழில் செய்து, குடும்பத்தை நிர்வகித்து வந்தார். இப்படி இருக்கும்போது இயேசுவை அவருடைய சொந்த ஊர்க்காரர்கள் புறக்கணித்ததில் வியப்பேதும் இல்லை.

இயேசு புறக்கணிக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம், அவர் அவர்களுக்கு மிகவும் அறிமுகம் ஆனவர் என்பதால். இயேசு நாசரேத்தில் தான் வளர்ந்தார். அதனால் அங்கிருந்தவர்களுக்கு அவர் மிகவும் அறிமுகமாயிருப்பார். அப்படி இருக்கும்போது நமக்குத் தெரியாததையா இவர் பேசிவிட்டார் என்று அவர்கள் அவரை புறக்கணிக்கின்றார்கள். ‘அருகாமை ஆபத்தை விளைவிக்கும்’ என்ற கூற்று ஒன்று உண்டு. அது இயேசுவுக்கு அப்படியே பொருந்துகின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இயேசு புறக்கணிக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அதுதான் இயேசு தன்னுடைய பணிவாழ்வு யூதர்களுக்கு மட்டும் கிடையாது எல்லா மக்களுக்கு உண்டு எனச் சொன்னது. இதனால் யூதர்கள் கடுஞ்சினம் கொண்டு அவரை மலையிலிருந்து கீழே தள்ளிவிடப் பார்க்கின்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே நடந்துசென்று அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகின்றார்.

யூதர்கள் புறவினத்தாரை நாயென, ஏன் நாயைவிடக் கீழானவர்களாக நினைத்தார்கள். இப்படி இருக்கும்போது ஆண்டவர் இயேசு, இறைவாக்கினர்களான எலியாவும் எலிசாவும் எப்படி புறவினத்தாருக்கு மத்தியில் பணிசெய்தார்களோ, அதுபோன்று தானும் செய்வேன் என்று சொன்னதால் அவர்மீது சீற்றம்கொள்கின்றார்கள், அவரைக் கொலை செய்யவும் துணிகின்றார்கள்.

இப்படி மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்களே என்று இயேசு கலங்கிவிடவில்லை. தன்னுடைய பணியைச் செய்யாமல் அவர் பின்வாங்கிவிடவும் இல்லை. இயேசு தொடர்ந்து இறையாட்சிப் பணியைச் செய்துவந்தார். இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், அவரைப் போன்று நாமும் நம்முடைய குடும்ப மற்றும் பொருளாதார இன்னும் சமூகப் பின்னணிகளுக்காகப் புறக்கணிக்கப்படலாம். இத்தகைய சூழ்நிலையில் நாம் மனம் தளர்ந்து போகாமல், முன்னேறிச் செல்லவேண்டும் என்பதற்கு இயேசுவே முன்னுதாரணமாக இருக்கின்றார்.

கவிஞன் ஒருவன் சொல்வான், “முடங்கிக் கிடந்தால் சிலந்தி வலைகூட உன்னைச் சிறைப்பிடிக்கும், மாறாக எழுந்து நடந்தால் இமயமலை கூட உனக்கு வழிகொடுக்கும்” என்று. எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை. ஆம், நாம் ஒருபோதும் மனம்தளர்ந்து போகக்கூடாது.

ஆகவே, இயேசுவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி நடக்கக்கூடிய நாம், அவரைப் போன்று புறக்கணிப்புகளையும் கடந்து, தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இறையாட்சிப் பணியை மனவுறுதியோடு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.