புனித அன்னை தெரேசாவைப் பற்றிய புதிய நூல்

புனித அன்னை தெரேசா அவர்கள் இறையடி சேர்ந்த நாள், செப்டம்பர் 5ம் தேதி சிறப்பிக்கப்படுவதையொட்டி, ஆகஸ்ட் 31, இவ்வெள்ளியன்று, அன்னையைப் பற்றிய மற்றுமொரு நூல், இத்தாலிய மொழியில் வெளியாகிறது.

“அன்னை தெரேசா: கடவுள் நம்பிக்கையற்றவருக்கும், திருமணமானவர்களுக்கும் புனிதர்” என்ற தலைப்பில் வெளியாகும் இந்நூலை, பாப்பிறை இல்லத்தில் ஆன்மீக உரைகளை வழங்கிவரும் அருள்பணி ரானியேரோ காந்தலமெஸ்ஸா (Raniero Cantalamessa) அவர்கள் எழுதியுள்ளார்.

1980ம் ஆண்டு முதல், பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளராகப் பணியாற்றிவரும் அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள், 2003ம் ஆண்டு, அன்னை தெரேசா அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வையொட்டி, பாப்பிறை இல்லத்திலும், வத்திக்கானிலும் வாழ்ந்தோருக்கு வழங்கிய ஆன்மீக உரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

2003ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் உடல் வலிமை குன்றியிருந்தாலும், இந்த உரைகளை தான் வழங்கியவேளையில், அவற்றிற்கு செவிமடுக்க தவறாமல் வந்திருந்தார் என்பதை, அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள், இந்நூலின் அறிமுகப் பிரிவில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னை தெரேசா பிறந்த ஆல்பேனியா நாடு, மத நம்பிக்கையற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டாலும், கம்யூனிச ஆட்சி அந்நாட்டில் தொடர்ந்த வேளையிலும், அது வீழ்ந்தபின்னரும், அன்னைக்கு தனிப்பட்ட மரியாதை விளங்குவதைக் கருத்தில் கொண்டு, இந்நூலின் தலைப்பு வழங்கப்பட்டது என்று அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள், குறிப்பிட்டுள்ளார்.

கப்புச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி காந்தலமெஸ்ஸா அவர்கள்  எழுதியுள்ள இந்நூலை, புனித பவுல் பதிப்பகம் வெளியிடுகிறது

Comments are closed.