இளையோருடன் சேர்ந்து நற்செய்தி வாசிக்க

திறந்த மனதுடன் வரவேற்கப்படும் கிறிஸ்துவின் அன்பு, நம்மை மாற்றுகிறது, நம்மை உருமாற்றுகிறது மற்றும், நம்மை அன்புகூரச் செய்கின்றது” என்ற வார்த்தைகள், ஆகஸ்ட் 31, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், Giuseppini d’Asti என அழைக்கப்படும், புனித யோசேப் தியாகிகள் சபையின் (Oblati di San Giuseppe) பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய ஐம்பது பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரோடு நெருங்கிய ஒன்றிப்பில், திருஅவையிலும், உலகிலும் தொடர்ந்து வாழ்ந்து, பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

புனித யோசேப்பின் தியாகிகள் சபையினர், தங்கள் வாழ்விலும், திருத்தூதுப் பணிகளிலும், நாசரேத்து புனித யோசேப்பை எடுத்துக்காட்டாகப் பின்பற்றி வாழுமாறு, அச்சபையை நிறுவிய, புனித ஜூசப்பே மரெல்லோ அவர்கள் கூறியுள்ளதையும் குறிப்பிட்டார், திருத்தந்தை.

கத்தோலிக்க திருஅவையின் தலைவரான திருத்தந்தையின் போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, அன்புடன் பணிந்து நடக்க வேண்டியது, இச்சபையினரின் முதல் கடமை என, புனித மரெல்லோ அவர்கள், தன் ஆன்மீக மகன்களுக்குக் கூறியுள்ளதையும், நினைவுபடுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகில், குறிப்பாக, இளையோர்க்குப் பணியாற்ற அழைப்புப் பெற்றிருக்கும் இச்சபையினர், நாசரேத்து புனித யோசேப்பைப் பின்பற்றி, தங்கள் வாழ்வாலும், வார்த்தையாலும், கிறிஸ்தவ வாழ்வுக்கும், இறையழைப்புக்கும், சான்றுகளாய் வாழுமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மேலெழுந்தவாரியான ஒரு கலாச்சாரத்தை எதிர்கொள்ளும் இன்றைய இளையோருடன் இருந்து, நற்செய்தியை அவர்களுடன் சேர்ந்து வாசித்து, இயேசு கிறிஸ்து பற்றிப் பேசி,          நற்செய்தியை வாழ்வோடு தொடர்புபடுத்த கற்றுக்கொடுக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இதன் வழியாக உறுதியான வருங்காலத்தைக் கட்டியெழுப்ப இயலும் என்றும், தனக்காகச் செபிக்குமாறும் கூறினார்.

Comments are closed.