புனித அன்னை தெரேசாவின் 108வது பிறந்தநாள் நினைவு

வாழ்வு என்பது, இறைவன், மனிதர்களுக்கு வழங்கிய ஒரு மாபெரும் கொடை என்பதையும், அந்தக் கொடை இறைவனுக்கு மட்டுமே உரியதொரு கொடை என்பதையும் அன்னை தெரேசா தன் வாழ்வின் வழியே உணர்த்தினார் என்று, கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 26 கடந்த ஞாயிறன்று, புனித அன்னை தெரேசா பிறந்ததன் 108வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, திருப்பலி நிறைவேற்றிய பேராயர் டிசூசா அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இத்தருணத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அன்னை தெரேசா பிறரன்பு சகோதரிகள் சபையின் தலைவி மேரி பிரேமா அவர்கள், பலருடைய வாழ்க்கை, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை வைத்து அளக்கப்படும் வேளையில், அன்னை தெரேசாவின் வாழ்க்கை, அன்பை அளவுகோலாகக் கொண்டிருந்தது என்று கூறினார்.
அன்னையின் நினைவுத் திருப்பலியைத் தொடர்ந்து, பேராயர் இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், மாசிடோனியா குடியரசிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்றும், மாசிடோனிய குடியரசு வழங்கிய அன்னை தெரேசாவின் வெண்கலச் சிலையை, பேராயர் டிசூசா அவர்கள் அர்ச்சித்தார் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.
1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, மாசிடோனியா குடியரசின் Skopje எனும் ஊரில் பிறந்த அன்னை தெரேசா அவர்கள், 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, கொல்கத்தாவில், தன் 87வது வயதில், இறையடி சேர்ந்தார்.
2003ம் ஆண்டு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அருளாளராகவும், 2016ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் உயர்த்தப்பட்ட புனித அன்னை தெரேசா, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இணை பாதுகாவலராக அறிவிக்கப்பட்டுள்ளார்

Comments are closed.