சேர்ந்து செபிக்கும் குடும்பம் சேர்ந்தே இருக்கும்

அன்பு சகோதரர், சகோதரிகளே, மாலை வணக்கம். கொண்டாட்டங்கள் என்பவை நம்மை மனிதபிமானம் மிக்கவர்களாகவும், கிறிஸ்தவ பண்புடையவர்களாகவும் மாற்றுகின்றன. குடும்ப விழா வரும்போது, அங்கு, அனத்து உறவுகளின் இருப்பும் உணரப்படுகிறது. அதில் கலந்து கொள்ள முடியாத, மற்றும், வெகு தூரத்தில் வாழ்கின்ற, உறவினர்களின் இருப்பும் உணரப்படுகிறது. கிறிஸ்துவில் ஒரே குடும்பமாக இருந்து, உலகெங்கும் பரந்து வாழும் நாம் அனைவரும், இந்த டப்ளின் கொண்டாட்டத்தில் பங்குபெறுகிறோம்.

மகிழ்வைப் பிரதிபலிக்கும் குடும்பங்கள்

இறைமக்களில் பெரும்பான்மையினராக இருப்பது குடும்பங்களே. குடும்பங்கள் இல்லையெனில் திருஅவையின் நிலை என்னவாக இருக்கும்? இந்த உலகில் கவுளின் அன்பு தரும் மகிழ்வை பிரதிபலிப்பவர்களாக ஒவ்வொரு குடும்பமும் இருக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார். நாம் அனுபவித்த அந்த மீட்பளிக்கும் அன்பை நம் வாழ்வு நடவடிக்கைகளில் நாம் வெளிக்கொணர வேண்டும் என இறைவன் விரும்புகிறார். கடவுளின் பிரசன்னத்தை தங்கள் வாழ்வில் பிரதிபலித்த எண்ணற்ற புனிதர்களை வரலாற்றில் காண்கிறோம். இன்றும் நம்மைச் சுற்றி நிறைய பேர் வெளியே தெரியாமல், அமைதியில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். அனைத்துக் குடும்பங்களிலும், பிறரை அன்பு கூர்ந்து, மன்னித்து, இரக்கம் காட்டும் அனைத்துக் குடும்பங்களின் மனங்களிலும் இறைப்பிரசன்னம் அமைதியாக குடிகொண்டுள்ளது. கிறிஸ்தவத் திருமணங்களும், குடும்ப வாழ்வும், கடவுளின் அன்பில் நங்கூரமிட்டதாக இருக்கும்போதுதான், அவற்றின் அனைத்து வனப்பும் மிளிர்கின்றன. தந்தையரும், தாய்மார்களும், தாத்தா பாட்டிகளும், குழந்தைகளும், பேரக்குழந்தைகளும், அன்பின் நிறைவை குடும்பங்களில் காண அழைப்புப் பெற்றுள்ளார்கள்.

Burkina Faso நாட்டு சாட்சியக் குடும்பம்

Burkina Faso நாட்டைச் சேர்ந்த Felicité, Isaac, Ghislain ஆகியோர், குடும்பத்தில் மன்னிப்பின் வலிமை குறித்த ஒரு உண்மை நிகழ்வை எடுத்துரைத்தார்கள். ‘தவறுவது மனித இயல்பு, மன்னிப்பதோ தெய்வீகம்’ என கவிஞர் ஒருவர் கூறியுள்ளார். ஆம், அது உண்மை. மன்னிப்பு வழங்கும் பண்பு, கடவுளிடமிருந்து பெறப்படும் சிறப்பு கொடை.

நம் குடும்பங்களில் ‘மனம் வருந்துகிறேன்’, ‘தயவுசெய்து’, ‘நன்றி’ என்ற மூன்று வார்த்தைகளை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டில் சண்டைகள் நிகழ்ந்தால், தூங்கப் போவதற்கு முன்னர், மன்னிப்பு கேட்டு விடுங்கள். ஏனெனில், மன்னிப்பை நாடும், மற்றும், மன்னிக்கும் குடும்பங்களே நீடித்து வாழ்கின்றன. ஒருவரையொருவர் மன்னிக்கும் தங்கள் பெற்றோரின் செயலைப் பார்க்கும் குழந்தைகளும் அவர்களிடமிருந்து மன்னிக்கக் கற்றுக் கொள்கின்றன. நாமும் ஒருவரையொருவர் மன்னித்து ஒப்புரவாக வேண்டும் என்பதற்காகவே இயேசுவும் நமக்காக  தன் உயிரைத் துறந்தார். இவ்வாறு, நாம், புனித பவுலின் வார்த்தைகளான, அனைத்தும் அழிந்து போகும், ‘ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது’ (1 கொரி. 13:8), என்ற உண்மையை உணர்கிறோம்.

இந்தியத் தம்பதியரின் பகிர்வு

இந்தியாவிலிருந்து வந்து சாட்சி சொன்ன நிஷாவும் டெட்டும், உண்மையான குடும்பமாக வாழ்வது எவ்விதம் என்பதைக் குறித்து, தங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதாகக் கூறினார்கள். சமூகத்தொடர்பு சாதனங்கள், குடும்பங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை அல்ல என்பதை இங்கு குறிப்பிட்டார்கள். மிதமாகவும், விவேகத்துடனும், பயன்படுத்தத் துவங்கினால், சமூக வலைத்தளங்கள் நல்ல பயனுடையதாக இருக்கும். நவீனத் தொழில்நுட்ப கருவிகளுடன் நாம் செலவிடும் நேரம் குறித்தும், குடும்ப அங்கத்தினர்களுடனும் கடவுளுடனும் நாம் ஒதுக்க வேண்டிய நேரம் குறித்தும், முடிவெடுக்க, இவர்களின் உரைப்பகிர்வு நமக்கு உதவலாம்.

அமைதி தேடும் குடும்பங்கள்

போர்கள் மற்றும் சித்ரவதைகளின் விளைவுகளான, வன்முறை மற்றும் அழிவின்போது கூட, மன வலிமை மற்றும் அமைதியின் ஆதாரத்தை, விசுவாசத்திலும் குடும்ப அன்பிலும் கண்டுகொண்டதாக Enass மற்றும் Sarmaad எடுத்துரைத்தனர். இவர்களின் பகிர்வு, அமைதி மற்றும் பாதுகாப்பைத் தேடி, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் எண்ணற்ற குடும்பங்களை, நமக்கு நினைவூட்டுகிறது.

அன்பு, ஏற்றுக்கொள்ளல், மன்னிப்பு என்ற அனைத்து நற்குணங்களையும், குடும்பங்களே கற்றுக்கொடுத்து, சமூகத்தைக் கட்டியெழுப்புகின்றன. ஓர் அயர்லாந்து அருள்பணியாளர் கற்பித்ததுபோல், ‘இணைந்து செபிக்கும் குடும்பம், சிதறாமல் இணைந்தே இருக்கிறது’, அதன் வழியாக அன்பை பிரதிபலிக்கிறது.

பொன்விழா காணும் தம்பதியரின் சாட்சியம்

பயன்படுத்தி தூக்கியெறியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள இன்றைய நவீன உலகில், அன்பின் தேவை குறித்தும், தங்கள் விசுவாசம் மற்றும் அன்பின் சாட்சிய வாழ்வு குறித்தும், பத்து குழந்தைகளின் பெற்றோராகிய மேரியும் டேமியனும் எடுத்துரைத்ததற்கு என நன்றியை வெளியிடுகிறேன். 50 ஆண்டுகால திருமண வாழ்வை சிறப்பித்துள்ள, Aldoவும், Marissaவும், தங்கள் குடும்பம், குழந்தைகள், மற்றும், பேரக்குழந்தைகளுடன், எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை இங்கு எடுத்துரைத்தார்கள். அவர்களின் பேரக்குழந்தைகள், அவர்களை இன்னும் இளமையாகவே வைத்திருக்கிறார்கள். தாத்தா பாட்டிகளின் மதிப்பை உணராத சமூகம், தன் வருங்காலத்தையே இழந்த சமூகமாகிறது. அனுபவமும் ஞானமும் நிறைந்த நம் தாத்தா பாட்டிகளிடமிருந்து நாம் அறிவுரைகளைப் பெறாமல் இருப்பது, பெரும் தவறாகும்.

திருத்தந்தை வழங்கிய ‘Amoris Laetitia’

குடும்பங்கள் என்பவை, திரு அவை மற்றும் சமூகத்தின் நம்பிக்கை. குடும்பங்களுக்குள் குடும்பமாக மனித குலம் வாழவேண்டும், அமைதியை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்குடனேயே இறைவன் நம்மைப் படைத்தார். அவரின் நற்செய்திக்கு சான்றுகளாக வாழ்வதன் வழியாக, இறைவனின் கனவுகளை நனவாக்க நம்மால் உதவ  இயலும். இறை மக்கள் ஒன்றாக இணைந்து வந்து ஒன்றிப்பில் வாழவும் உதவ முடியும். இதற்காக உங்களுக்கு ‘Amoris Laetitia’ என்ற என் நூலின் பிரதியை வழங்குகிறேன். இது, குடும்பத்தின் நற்செய்தியை மகிழ்வுடன் வாழ உதவும் வழிகாட்டி. உங்கள் வாழ்வில் அமைதியின் அரசியும், குடும்பங்களின் அரசியுமாகிய அன்னை மரி வழிநடத்துவாராக. இந்நேரத்தில், நாம் அனவரும் ஒன்றிணைந்து, இந்த உலக குடும்ப மாநாட்டின் செபத்தை செபித்து இந்நிகழ்ச்சியை நிறைவு செய்வோம்

Comments are closed.