அன்னை மரியா காட்சி

அயர்லாந்து மொழியில் An Cnoc என்பதற்கு குன்று என்று அர்த்தம். அன்னை மரியா அங்கு காட்சியளித்ததற்குப் பின்னர், அவ்விடம், கன்னி மரியின் குன்று என அழைக்கப்படுகின்றது. அயர்லாந்திற்கு மேற்கேயுள்ள Knock கிராமத்தின் பங்கு ஆலயத்திற்கருகில், 1879ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, ஆறு முதல் 75 வயதுக்குட்பட்ட 15 பேர், கனமழைக்கு ஒதுங்கிக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில், அவர்கள், ஆலயச் சுவரில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்டனர். அவர்கள் மழையில் நின்றுகொண்டே, அன்னை மரியாவை ஏறத்தாழ இரண்டு மணி நேரம் காட்சியில் கண்டு செபித்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில், புனித யோசேப்பும், நற்செய்தியாளர் புனித யோவானும், அன்னை மரியாவுக்கு அருகில் அமைதியாக இருந்துள்ளனர். காட்சி முடிந்தபோது, கனமழை பெய்தும், அந்த 15 பேரும் சிறிதளவுகூட நனையவில்லை எனச் சொல்லப்படுகின்றது. அயர்லாந்து நாடு முழுவதையுமே உலுக்கிய இக்காட்சி, Knock கிராமத்தின் வரலாற்றைச் சிறப்பாக்கியது. அன்று முதல், ஒவ்வோர் ஆண்டும் 15 இலட்சத்துக்கு அதிகமான திருப்பயணிகள் அத்திருத்தலம் செல்கின்றனர். 1940ம் ஆண்டில் ஐம்பதாயிரம் அயர்லாந்து மக்கள், திருப்பயணமாக அங்குச் சென்று, உலக அமைதிக்காகச் செபித்தனர். 1954ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் மரியா ஆண்டு அறிவிக்கப்பட்டதையடுத்து, இலட்சக்கணக்கான திருப்பயணிகள் Knock அன்னை மரியா திருத்தலம் சென்றனர். அவ்வாண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் சார்பாக, அன்னை மரியாவுக்கு மணிமகுடம் சூட்டப்பட்டது. 1979ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் அத்திருத்தலம் சென்றுள்ளார். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 26, ஞாயிறன்று அத்திருத்தலம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்க செபமாலை ஒன்றை அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தார்

Comments are closed.