ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே

சூரிய வெப்பம் காரணமாக இந்த ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து புதன் பொது மறைக்கல்வி உரைகளும் அருளாளர், திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக இந்த மாதத்தில் அவ்வப்போது மழை பெய்து தட்பவெப்ப நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்த வாரமும் திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை, உள் அரங்கிலேயே இடம்பெற்றது. பத்துக்கட்டளைகள் குறித்த தன் மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக, ‘உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே’ என்ற கட்டளை குறித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்புச் சகோதரர் சகோதரிகளே, ”உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே’ என்ற இறைவனின் கட்டளைக் குறித்து இன்று நோக்குவோம். விவிலியத்தில் பெரும்பாலான நேரங்களில், ஒருவரின் பெயர் என்பது, அவரின் ஆழமான உண்மைத்தன்மையை உருவகப்படுத்துவதாகவும், எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது. மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் பெயர் என்பது, மிக மேலான புனிதம் நிறைந்தது. ஆகவே, அப்பெயர், எக்காலத்திலும் தவறாகப் பயன்படுத்தப்படவோ, தெய்வ நிந்தனைக்கு உள்ளாக்கப்படவோ கூடாதது.
யூதர்களின் Yom Kippur எனப்படும் பாவக்கழுவாய் திருவிழாவின்போது, கடவுளின் பெயர் மிக உன்னத முறையில் எழுப்பப்பட்டு, அவரின் இரக்கமும் மன்னிப்பும் இறைஞ்சப்படுகிறது. தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் கிறிஸ்தவர்கள் திருமுழுக்கு அளிக்கப்படுகின்றனர். இவ்வாறு, கடவுளின் பெயர் வீணாக அல்ல, மாறாக, கிறிஸ்துவில் தத்துப் பிள்ளைகளாக மறுபிறப்பு எடுப்பதன், மற்றும், நம் மீட்பின் உறுதிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இயேசு கற்றுக்கொடுத்த செபத்தில் நாம், ‘உமது திருப்பெயர் போற்றப்படுவதாக’ என சொல்லும்போது, கடவுள் பெயரை நாம், ஒவ்வொரு நாளும், நம்மீது புதிதாக எடுக்கிறோம். நம் வாழ்வாலும், திரு அவையின் சாட்சியத்தாலும் கடவுளின் பெயர் மேலும் அறியப்பட்டதாகவும், அன்புகூரப்பட்டதாகவும் மாறவேண்டுமென நாம் வேண்டுவோம். கிறிஸ்துவில், நம் பாவங்களை ஏற்று, நமக்கு அவரின் முடிவற்ற கருணையையும் அன்பையும் வெளிப்படுத்திய இறைவனுடன் நம் சிறப்பு உறவின் அடையாளமாக, அவரின் புனிதப் பெயரை நாம் பயபக்தியுடன் வழிபடுவோமாக.
மேலும், கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களின் பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, இப்புதன் காலையில், பொது மறைக்கல்வியுரைக்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் சிறிய அறையில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பொது மறைக்கல்வியுரையின் இறுதியில், அனைத்து விசுவாசிகளுக்கும், திருப்பயணிகளுக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.