திருப்பீட செயலகத்திற்கு புதிய நேரடிப் பொதுச்செயலர்

“விசுவாசம் நினைவால் ஊட்டம் பெறுகிறது, கடவுள் நமக்காக எவ்வளவு வியத்தகு செயல்களைச் செய்துள்ளார், நம் வானகத் தந்தை எவ்வளவு தாராளமிக்கவர்!” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், திருப்பீட செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலராக, பேராயர் Edgar Peña Parra அவர்களை, மரியின் விண்ணேற்பு விழாவான இப்புதனன்று   நியமித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற அக்டோபர் 15ம் தேதியன்று இப்பொறுப்பை ஏற்கவுள்ள பேராயர் Peña Parra அவர்கள், தற்போது ஆப்ரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வருகிறார்.

இதற்குமுன், திருப்பீட செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலராக, கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், 2011ம் ஆண்டு மே 10ம் தேதி முதல், 2018ம் ஆண்டு ஜூன் 29ம் தேதிவரை பணியாற்றினார்.

சிறிய வாழ்க்கை குறிப்பு

வெனெசுவேலா நாட்டின் Maracaiboவில், 1960ம் ஆண்டு மார்ச் 6ம் நாளன்று பிறந்த பேராயர் Peña Parra அவர்கள், Maracaibo மறைமாவட்டத்திற்கென, 1985ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருஅவை சட்டத்தில் முனைவர் பெற்றுள்ள இவர், 1993ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளன்று, திருப்பீட தூதரகப் பணியைத் தொடங்கினார். கென்யா, முன்னாள் யுக்கோஸ்லாவியா மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில், திருப்பீட பிரதிநிதியாகவும், 2001ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, பாகிஸ்தானில் திருப்பீடத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

Comments are closed.