அன்னை மரியே, விசுவாச வாழ்வை எமக்குக் கற்றுத்தாரும்
மரியே, இரக்கத்தின் அன்னையே, எப்போதும் எம் அருகில் இருக்கும் நீர், விசுவாசத்தை எவ்வாறு வாழ்வது மற்றும், அதை எவ்வாறு கொண்டிருப்பது என்பது பற்றி, எமக்குக் கற்றுத்தாரும் என்ற சொற்களை, மரியின் விண்ணேற்பு விழாவாகிய ஆகஸ்ட் 15, இப்புதன்கிழமையன்று தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தமஸ்கு நகர் புனித ஜான் அவர்களின் கூற்றுப்படி, கி.பி.451ம் ஆண்டில் நடைபெற்ற கால்செதோன் பொதுச்சங்கத்தில், உரோமைப் பேரரசர் மார்சியன் அவர்கள், இறைவனின் அன்னையாகிய மரியின் உடலைக் கேட்டார் எனவும், அதற்குப் பதிலளித்த, எருசலேம் ஆயர் புனித ஜூவெனல் அவர்கள், எல்லாத் திருத்தூதர்களும் சூழ்ந்திருக்க, மரியா இறந்தார், பின்னர், ஒருநாள், புனித தோமையாரின் வேண்டுகோளின்பேரில் மரியாவின் கல்லறையைத் திறந்தனர், அப்போது, கல்லறை காலியாக இருந்தது, இதனால் மரியாவின் உடல் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற முடிவுக்கு, திருத்தூதர்கள் வந்தனர் எனக் கூறினார் எனவும் தெரியவருகிறது.
1950ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி, திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள், Munificentissimus Deus எனப்படும் திருத்தூது கொள்கைவிளக்கத்தின் வழியாக, அன்னை மரியின் விண்ணேற்பை, விசுவாசப் பேருண்மையாக அறிவித்தார்.
அன்னை மரியின் விண்ணேற்பு விழா, பல நாடுகளில் பெரிய விழாவாகவும், அரசு விடுமுறை நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Comments are closed.