வேலையில்லா இளையோர் – திருத்தந்தையின் கவலை

ஐரோப்பிய நாடுகளில் இயேசு சபை பயிற்சி நிலையில் இருப்போர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இப்புதன் காலை வத்திக்கானில் சந்தித்த வேளையில், வேலையின்றி இருக்கும் இளையோரைக் குறித்து இயேசு சபையின் இளம் துறவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, திருத்தந்தை நீண்டதொரு பதிலை வழங்கினார்.

வேலையில்லா நிலை மாண்பைச் சிதைக்கிறது

திறமைகளும், தகுதிகளும் உள்ள இளையோர், வேலையின்றி இருப்பது, வெறும் பொருளாதாரத் தொடர்பான பிரச்சனை அல்ல, மாறாக, அந்நிலை, இளையோரின் தனிப்பட்ட மாண்பைச் சிதைக்கிறது என்பதே பெரும் பிரச்சனை என்று திருத்தந்தை தன் பதிலுரையில் முதலில் தெளிவுபடுத்தினார்.

பொருளாதார, மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த நிலை, அனைத்து இளையோரையும், பணம் திரட்டும் ஒரே குறிக்கோளுக்குள் சிக்க வைக்கிறது என்றும், அவர்களில் பலர், விரைவில், தங்கள் வேலைகளில் வேறு எந்த நிறைவும் பெறாமல் தவிக்கின்றனர் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

வேலையற்ற இளையோரின் ஆபத்தான முடிவுகள்

நிறைவு தராத இந்த வெற்றிடத்தை சமாளிக்க இயலாத இளையோர், தற்கொலை, போதைப்பொருள் அல்லது, தீவிரவாத குழுக்கள் என்ற ஆபத்தான வழிகளைத் தெரிவு செய்கின்றனர் என்பதையும், திருத்தந்தை, இளம் இயேசு சபையினரிடம் கவலையுடன் தெரிவித்தார்.

ஆபத்தான இவ்வழிகளில் தங்களையே இழந்துவரும் இளையோரைக் குறித்து, அரசுகளும், ஊடகங்களும், அமைதி காப்பதனால், இந்த ஆபத்தின் வீரியத்தை நாம் உணராமல் போகின்றோம் என்ற எச்சரிக்கையையும் திருத்தந்தை தன் பதிலில் கூறினார்.

வேலையில்லா நிலையில் இருக்கும் இளையோரைச் சந்திக்கும் வேளையில், அவர்களின் மாண்பை நிலைநாட்டும் முயற்சிகளில் இளம் இயேசு சபையினர் முதலில் ஈடுபடவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்

Comments are closed.