இயேசு சபை இளம் துறவியருடன் திருத்தந்தை சந்திப்பு
பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது, இயேசு சபையின் தனித்துவமான பண்பு என்றும், உள்மன சுதந்திரமும், கீழ்படிதலும் ஒருங்கிணைவது மற்றொரு சிறப்பு பண்பு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய நாடுகளிலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த இயேசு சபையினரிடம் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் இயேசு சபை பயிற்சி நிலையில் இருக்கும் இளம் துறவியர், உரோம் நகரில் மேற்கொண்டுள்ள கோடை சந்திப்பின் ஒரு பகுதியாக, இப்புதன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அருளாளர் ஆறாம் பால் அரங்கத்தின் தனி அறையில் சந்தித்தனர்.
ஆன்மாக்களையும், உள்ளங்களையும் இணைக்கும் பணி
தான் பயிற்சியில் இருந்தவேளையில், இயேசு சபையில் நிலவியச் சூழலையும், இன்றையச் சூழலையும் ஒப்புமைப்படுத்திப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்புற மாற்றங்கள் இருந்தாலும், ஆன்மாக்களையும், உள்ளங்களையும் இணைக்கும் பணியில் இயேசு சபையின் அடிப்படை இன்னும் மாறவில்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.
அருளாளரான திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள், இயேசு சபையின் 32வது உலக அவை பிரதிநிதிகளுக்கு வழங்கிய உரையில் கூறிய கருத்துக்களையும், முன்னாள் உலகத் தலைவர், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள் மேற்கொண்ட இறுதிப் பயணத்தில், தாய்லாந்து புலம்பெயர்ந்தோர் முகாமில் வழங்கிய உரையில் கூறிய கருத்துக்களையும் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று திருத்தந்தை, இளம் இயேசு சபையினரிடம் கூறினார்.
இவ்விரு உரைகளில் வெளிப்படும் துணிவு, விளிம்புகளுக்குச் செல்லுதல், மற்றும், கருத்துக்களின் சங்கமம் என்ற எண்ணங்களை தியானித்து பலன் பெறுவதற்கும், இறைவனில் வேரூன்றியிருப்பதற்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் அழைப்பு விடுத்தார்.
புனித பீட்டர் ஃபேபர்
ஐரோப்பிய இயேசு சபையின் பயிற்சியில் இருப்போர் கூட்டத்திற்கு ‘தொடர்புகொள்ளுதல்’ என்பது மையக்கருத்தாக உள்ளது தனக்கு மகிழ்வளிக்கிறது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, புனித பீட்டர் ஃபேபர், இறைவனோடும், பிறரோடும், ஆன்மாவோடும் கொள்ளவேண்டிய தொடர்புகளைக் குறித்து எழுதியிருப்பதை, இளம் துறவியர் படித்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை ஆறாம் பால் அவர்களின் உரையையும், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களின் உயில் போல விளங்கும் இறுதி உரையையும், இளம் துறவியர் கட்டாயம் படித்துப் பயன்பெறவேண்டும் என்று திருத்தந்தை இச்சந்திப்பின் இறுதியில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கூறினார்.
Comments are closed.