கிறிஸ்தவர்கள் பாகுபடுத்தப்படுகின்றனர், ஆயர்கள்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஜார்கண்ட் மாநிலத்தில், கிறிஸ்தவர்கள் பயங்கரவாதிகள் போன்று நடத்தப்படுவதை நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அம்மாநிலத்தின் அனைத்து ஒன்பது கத்தோலிக்க ஆயர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாகச் செயல்படும் மாநில ஆளுனர் Draupadi Murmu அவர்களைச் சந்தித்த மூன்று நாள்களுக்குப்பின், ஜூலை 30, இத்திங்களன்று, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் மனு அனுப்பியுள்ளனர், ஜார்கண்ட்  மாநில ஆயர்கள்.

ஆளுனருடன் இச்சந்திப்பை ஏற்பாடு செய்த இராஞ்சி துணை ஆயர் Telesphore Bilung அவர்கள் கூறுகையில், காவல்துறை, கடந்த சில மாதங்களாக, கிறிஸ்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கைது செய்கின்றது என்றும், புலன்விசாரணயாளர்கள், கிறிஸ்தவக் குழுக்களைச் சூறையாடுகின்றனர் என்றும் கூறினார்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் போன்று, கிறிஸ்தவர்களைப் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை அதிகாரிகள் பின்தொடர்கின்றனர் எனவும், சில விவகாரங்களில் 24 மணி நேரத்திற்குள் நிதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கிறிஸ்தவ நிறுவனங்கள் வலியுறுத்தப்படுகின்றன என்றும், ஆயர் Bilung அவர்கள் கவலை தெரிவித்தார்.

மேலும், கிறிஸ்தவத் தலைவர்கள், அறிவு குறைந்தவர்கள் என, ஜார்கண்ட் மாநில காவல்துறையின் பேச்சாளர் ஆர்.கே.மாலிக் அவர்கள் கூறியுள்ளார் என, யூக்கா செய்தி கூறுகின்றது.(UCAN)

Comments are closed.