அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளி வீசுவர்

அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களைப் பற்றிச் சொல்லப்படுகின்ற ஒரு நிகழ்வு.

ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா ஆசை ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தார். ஒருநாள் வாஷிங்டனுக்கு புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்தார். அவர் வெட்டித் தள்ளியதில் அவருடைய அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி.

“மரத்தை யார் வெட்டியது?” என அவர் எல்லாரிடமும் கேட்க, வாஷிங்டனோ, தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டார். உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என வீட்டிலிருந்த எல்லாரும் நடுங்கிக் கொண்டிருக்க, வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாக இருந்தார். பின்னர் மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன் என்று தெரிந்தும், நீ உண்மையை சொன்னாய் பார்த்தியா, அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மேலும் செர்ரி மரம் வெட்டப்படாம இருந்திருந்தா எனக்குக் கிடைக்கிற சந்தோஷத்தைவிட, நீ உண்மை பேசியதால் எனக்குக் கிடைத்திருக்கின்ற சந்தோஷம் மிகப்பெரியது” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினார்.

இந்நிகழ்வு வாஷிங்டனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து போனது. அதன்பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய விஷயத்துக்கும் பொய் சொல்லாமல் நேர்மையோடு நடக்கவேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். அதுவே அவரை அமெரிக்காவின் முதல் அதிபராக உயர்த்தியது. அவர் அமெரிக்க அதிபராக தொடர்ந்து இரண்டுமுறை இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆம், நேர்மையோடு நடக்கின்ற யாவரும், தங்களுடைய வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடைவார் என்பது உண்மை.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு வயலில் தோன்றிய களைகள் உவமையைப் பற்றி தன்னுடைய சீடர்களுக்கு விளக்கிச் சொல்கின்றார். அப்படிச் சொல்கின்றபோது இறுதியாகச் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், “அப்போது நேர்மையாளர் தன் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர்” என்பதாகும். இவ்வார்த்தைகளை நாம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

இன்றைக்கு நேர்மையாளர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிதான ஒரு காரியமாகப் போய்விட்டது. இதற்கு முக்கியமான காரணம் ஒருவர் நேர்மையாளராய் இருப்பதனால் சந்திக்கக்கூடிய சவால்கள்தான். ஒருவர் நேர்மையாளராய் வாழ்கின்றபோது அவர் ‘இந்த சமூகத்திற்குப்’ பிடிக்காதவர்களாய் ஆகிவிடுகின்றார். அதைவிட சுற்றி இருப்பவர்கள் அவரை, ‘பிழைக்கத் தெரியாதவன்’, ‘ஊரோடு ஒத்து வாழத் தெரியாதவன்’ என்று கேலி செய்கின்ற அவலநிலைக்கு உள்ளாகிவிடுகின்றார். இதனாலேயே பலர் எதற்கு நேர்மையாளராய் வாழவேண்டும் என்று, ஊரோடு ஒத்து வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இதற்கு ஒருசிலர் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பலர் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இன்னொரு பக்கம் தீயவர்கள், தவறான வழியில் செல்லக்கூடியவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதுகூட, இந்த சமூகத்தில் நேர்மையாளராய் வாழ்வதைவிடவும் தீயவராய் வாழ்ந்தால்தான் பிழைக்கமுடியும் என்ற தவறான கருத்து நிலவுவதற்கும் நேர்மையாளர்கள் அருகிப் போவதற்கும் காரணமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய, “நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர்” என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?

நேர்மையாளர்களை இந்த சமூகம் வேண்டுமானால் புறக்கணிக்கலாம், துன்புறுத்தலாம். ஆனால், ஆண்டவருடைய ஆட்சியில் அவர்களுக்கு என்று சிறப்பிடம் உண்டு என்பதுதான் உண்மை. மத்தேயு நற்செய்தி 5:11,12 ல் இயேசு கூறுவார், “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்பிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்” என்று. ஆம், இந்த உலகம் நீதியோடும் நேர்மையோடும் நடக்கின்றவர்களைத் துன்புறுத்தலாம். ஆனால், இறைவனுடைய ஆட்சியில் அவர்களுக்கு மிகுந்த கைம்மாறு கிடைக்கும்; கதிரவனைப் போல் ஒளிவீசுவர் என்பது உண்மை.

ஆகவே, இந்த உலகம் நம்மை ஏசுமோ, பேசுமோ என்றெல்லாம் நினைத்துக் கவலைப் படமால், இறுதிவரைக்கும் நேர்மையோடும் நீதியோடும் நடப்போம். விண்ணகத்தில் இறைவன் நமக்குத் தருகின்ற ஆசிர்வாதம் மிகுதியாக இருக்கும் என நம்புவோம். எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.