திருத்தந்தையின் 6 ஆண்டு பணி – நினைவுப் பதக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, தன் தலைமைப்பணியின் 6வது ஆண்டை நிறைவு செய்வதையொட்டி, ஒரு நினைவுப் பதக்கம், ஜூலை 26, இவ்வியாழன் முதல், பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்று, திருப்பீட பாரம்பரிய நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.
இப்பதக்கத்தின் முன்புறம், தூய ஆவியாரின் உருவத்திலிருந்து வட்டவடிவில் ஒளிக்கற்றைகள் கிளம்புவதுபோலவும், இந்த ஒளிக்கற்றைகளின் நடுவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அதிகார இலச்சினை அமைந்துள்ளது போன்றதோர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
பதக்கத்தின் பின்புறம், அமைதியை வலியுறுத்தும் இரு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குழந்தையை அணைத்தபடி நிற்கும் தாயும், அமைதியைக் குறிக்கும் ஒலிவக் கிளையும், பதக்கத்தின் மேல்பக்கத்திலும், போர்ச் சூழலைக் குறிக்கும் முள்வேலியால் சூழப்பட்ட மனிதரின் உருவம் கீழ்பக்கத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
“அமைதியால் எதுவும் தொலைந்துபோவதில்லை, போரினால் அனைத்தும் தொலைந்துபோகிறது” என்று, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டு, வானொலி வழியே விடுத்த செய்தியின் ஒரு கூற்று, இப்பதக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
கியாரா பிரிஞ்சிப்பே (Chiara Principe) என்ற கலைஞரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கம், தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது
வத்திக்கான்
Comments are closed.