மக்களின் மாண்பையும் உரிமையையும் மனதில் கொண்டு உழையுங்கள்
மத்தியதரைக் கடல் வழியாக புலம்பெயர்வோரை ஏற்றி வரும் படகுகள் விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்கத்தில் அனைத்துலக சமூகத்தினர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வழைப்பை முன்வைத்த திருத்தந்தை, அனைத்து மக்களின் உரிமைகளையும், மாண்பையும், மனதில் கொண்டு, புலம்பெயர்வோரின் வாழ்வைப் பாதுகாக்க, அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும் என விண்ணப்பித்தார்.
அண்மையில், மத்தியதரைக் கடல் பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்கள் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக, தான் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
இம்மாதம் 17ம் தேதி, 153 பேரை, ஆப்ரிக்காவிலிருந்து ஏற்றி வந்த படகு, கடலில் கவிழ்ந்ததில் ஒரு பெண்ணும், குழந்தையும் தண்ணீரில் மூழ்கி இறந்ததையும், இரண்டு நாட்களுக்குப் பின்னர், சிரியாவின் புலம்பெயர்ந்த மக்கள் ஏறத்தாழ 150 பேரை ஏற்றிவந்த படகு ஒன்று சைப்ரஸ் அருகே கவிழ்ந்ததில், 19 பேர் உயிரிழந்ததையும், 25 பேர் காணாமல் போனதையும் குறித்து மூவேளை செப உரையில் தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்
வத்திக்கான்
Comments are closed.