நிக்கராகுவா மக்களுக்காக திருப்பலிகளும் செபங்களும்

துன்பகரமானச் சூழலைச் சந்தித்து வரும் நிக்கராகுவா மக்களுக்கு, தங்கள் திருப்பலிகள், மன்றாட்டுக்கள் வழியே, அருள்பணியாளர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று இத்தாலியக் கர்தினால் மவுரோ பியாச்சென்சா (Mauro Piacenza) அவர்கள், கூறியுள்ளார்.

தேவைப்படும் திருஅவைக்கு உதவி (Aid to the Church in Need – ACN) என்ற அமைப்பின் உலகத் தலைவரான, கர்தினால் பியாச்சென்சா அவர்கள், நிக்கராகுவா தலத்திருஅவையுடன் கடந்த சில நாட்களாக தொடர்புகொண்டு பேசிய பின்னர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகெங்கும் பணியாற்றிவரும் இவ்வமைப்பின் 23 நாடுகளில் உள்ள அலுவலகங்கள், நிக்கராகுவா நாட்டிற்கென திருப்பலிகளையும், செபங்களையும் கோரி, கொள்கைப்பரப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன என்று கர்தினால் பியாச்சென்சா அவர்கள், கூறியுள்ளார்.

ஒப்புரவு பணியை வழங்கும் நிக்கராகுவா ஆயர்கள்

இதற்கிடையே, நிக்கராகுவா நாட்டில் உரையாடலையும் ஒப்புரவையும் வளர்ப்பதற்கு தங்கள் பணி தொடர்ந்து வழங்கப்படும் என்பதை, அந்நாட்டு ஆயர் பேரவை, அரசுத் தலைவர் டேனியல் ஒர்த்தேகா அவர்களுக்கு, ஒரு மடல் வழியே அறிவித்துள்ளது.

அந்நாட்டு கத்தோலிக்க கோவில்களில் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பரிகாரமாக கர்தினால் லியோபோல்தோ பிரேனெஸ் (Leopoldo Brenes) அவர்கள், திருத்தூதர் புனித யாக்கோபு திருநாளன்று, பரிகாரப் பலியை தலைமையேற்று நடத்தினார் என்று SIR செய்தி கூறியுள்ளது.

அரசின் கடுமையான அடக்குமுறைக்கு, கத்தோலிக்கர்கள், தங்கள் வெறுப்பினாலும், வன்முறையினாலும் பதிலிருப்பதற்குப் பதில், அன்பையும், பொறுமையையும் ஆயுதங்களாகக் கொண்டிருக்கவேண்டும் என்று கர்தினால் பிரேனெஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்

Comments are closed.