முன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்

சுவிஸ் மெய்க்காப்பாளர் ஒருவருக்கு வத்திக்கானில் நடைபெற்ற திருமணத் திருப்பலிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சென்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிகழ்வு, இத்திங்கள் மாலை வெளியானது.

சுவிஸ் மெய்க்காப்பாளர் ஒருவருக்கும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் வத்திக்கான் நகருக்குள் அமைந்துள்ள புனித ஸ்தேவான் சிற்றாலயத்தில் திருமணத் திருப்பலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்திருமணத் திருப்பலியை நிகழ்த்த, பிரேசில் நாட்டவரான அருள்பணி ரெனாத்தோ தோஸ் சாந்தோஸ் அவர்கள், சிற்றாலயத்தின் சக்ரீஸ்தில் நுழைந்தவேளையில், அங்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே, அவருக்காகக் காத்திருந்ததைக் கண்டு, அவர் ஆனந்த அதிர்ச்சி அடைந்ததாகக் கூறினார்.

திருமணத் திருப்பலியை நிகழ்த்த திருத்தந்தை பீடத்திற்குச் சென்றபோது, மணமக்களும், கூடியிருந்தோர் அனைவரும் தாங்கள் காண்பதை நம்பமுடியாமல் திகைத்து நின்றனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆடுகளின்மீது உண்மையான அக்கறை கொண்ட மேய்ப்பர் என்பதை இந்த ஆனந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு தனக்கு உணர்த்தியது என்று அருள்பணி தோஸ் சாந்தோஸ் அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

திருமணம் என்ற அருளடையாளத்தின் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் ஒப்பற்ற மதிப்பையும், திருமண வாழ்வில் கிறிஸ்துவை மையப்படுத்தவேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் இந்த நிகழ்வு தெளிவாக உணர்த்துகிறது என்று, அருள்பணி தோஸ் சாந்தோஸ் அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்

Comments are closed.