மனமாற்றம் காலத்தின் கட்டாயம்

காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியில், மக்கள் சுயநிர்ணய உரிமை கோரி போராடி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. இதற்கிடையில் அங்கு ராணுவத்தைக் குவித்துள்ள இந்தியா, போராட்டங்களைக் கட்டுப்படுத்திவருகிறது. அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில், இளைஞர்கள் அடிக்கடி பாதுகாப்புப் படையினர்மீது கல்வீசும் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. மேலும், அங்கு பல போராளிக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த இயக்கங்களில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இணைவதும் நடக்கிறது.

அவ்வாறு ஆயுதம் தாங்கிய குழுக்களில் இணையும் இளைஞர்களை வன்முறைப்பாதையிலிருந்து திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை காஷ்மீர் அரசு எடுத்துவருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோர்கள், தங்கள் மகன்களைக் கண்ணீருடன் திரும்ப வீட்டுக்கே அழைப்பது போன்ற வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன. இதைப் பார்த்து மனம் திருந்தும் இளைஞர்கள், ஆயுதவழிப் போராட்டத்தைக் கைவிட்டு மனம் திருந்தி வீடு திரும்புகிறார்கள்.

சமீபத்தில் ஆயுதம் தாங்கிய குழுவில் இணைந்த ஓர் இளைஞரின் தாயார், “திரும்ப வந்துவிடு மகனே!” எனக் கண்ணீருடன் மன்றாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்து நெகிழ்ந்த அந்த இளைஞர், மனம் திருந்தி வீடு திரும்பியிருக்கிறார். இதுபோல மேலும் 12 இளைஞர்கள் வன்முறைப்பாதையைக் கைவிட்டு, மனம்மாறி திரும்பி வந்துள்ளனர். (மார்ச் 03, 2018 அன்று வெளிவந்த செய்தியறிக்கை).

தவறான பாதையில் செல்கின்ற இளைஞர்கள் தங்களுடைய தாயாரின் கண்ணீரைப் பார்த்துவிட்டு, மனம்திரும்பி வருவது என்பது உண்மையிலே பாராட்டபடவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக ஆண்டவர் இயேசு எவ்வளவுதான் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தபோதும் மனந்திரும்பாமல் இருக்கின்ற நகரங்களை என்னவென்று சொல்வது? நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் போன்ற நகர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். சாடுகிறார் என்பதைவிடவும் அந்நகர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனைத் தீர்ப்புக் கிடைக்கும் என்பதைப் பற்றிப் பேசுகின்றார். இயேசு எதற்கு இந்நகரை இவ்வளவு கடுமையாகச் சாடுகின்றார் என்பதை அறிந்துகொண்டோம் என்றால், அந்நகரினர் செய்த தவற்றை நாமும் செய்யாது இருக்கலாம்.

கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் என்ற இந்த நகரங்களில் இயேசு அதிகமான புதுமைகளைச் செய்திருக்கவேண்டும், நிறையப் போதித்திருக்கவேண்டும். அதனால்தான் இயேசு இந்த நகரங்களின்மீது இவ்வளவு சினம் கொள்கின்றார்; தான் இந்த மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்தபோதும் இவர்கள் இப்படியே இருக்கின்றார்களே என்று ஆதங்கப்படுகின்றார். இந்த நகரங்களில் வாழ்ந்தோர் இயேசு செய்த புதுமைகளைக் கண்டு, அவர் போதித்த போதனைகளைக் கேட்டு அவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அவர்கள்மீது நம்பிக்கைகொள்ளவில்லை. அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறாகும்.

இந்நகரினர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளாதது முதல் தவறு என்று சொன்னால், அவர்கள் இயேசுவின் போதனைக்கு ஏற்ப, எந்தவொரு பலனும் தராமல் வாழ்ந்தது இரண்டாவது தவறாகும். யோவான் நற்செய்தி 15:8 ல் இயேசு கூறுவார், “நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடர்களாய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது” என்று. ஆம், மூன்று நகரினரும் ஏதாவது பிரயோசனமான, பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருக்கவேண்டும். அப்படியில்லாமல், முன்பு எப்படி வாழ்ந்து வந்தார்களோ அதுபோன்று பாவ வாழ்க்கையில் வாழ்ந்து வந்ததனால் அவர்கள் இயேசுவின் சினத்திற்கு ஆளாகின்றார்கள். காய்க்காத அத்திமரத்தை ஆண்டவர் இயேசு சபித்தார் என்று நற்செய்தியில் வாசிக்கின்றோம். இவர்கள் எந்தவொரு பலனும் தராமல், மனம்மாறாமல் வாழ்ந்ததினால், இயேசுவின் சாபத்திற்கு உள்ளாகின்றார்கள்.

இங்கே நம்முடைய வாழ்க்கையையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். அனுதினமும் இறைவனின் வார்த்தையைக் கேட்கின்றோம், இறை விருந்தில், திருவிருந்தில் கலந்துகொள்கின்றோம். அப்படியிருக்கும்போது நாம் அதற்கேற்ற பலனைத் தந்தாக வேண்டும். அப்படி நாம் பலனைத் தராமல் ஏனோதானோ என்று வாழ்ந்தோம் என்றால், இயேசுவின் சினத்திற்கு உள்ளாவோம் என்பது உறுதி.

கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் போன்ற நகர்களில் வாழந்தவர்கள் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதற்கு அல்ல, எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கின்றார்கள்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், கனிகொடுக்காத நிலையை மிகப்பெரிய குற்றம் என உணர்வோம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.