எப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்

கடவுள் தன் பணிகள் வழியாக நம்மை எப்போதும் ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதால், அவரின் பாதைகளுக்கு நம்மை திறந்தவர்களாக மாற்றுவதற்கு செயல்படவேண்டுமேயொழிய, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவரை இழுக்க முயலக்கூடாது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சியுடன் செவிமடுப்பதையும், எளிமையுடன் காத்திருப்பதையும் நம்மிடமிருந்து இறைவன் எதிர்பார்க்கிறார் என்றார்.

இறைவன் நம்மைத் தேடிவருவதில் உள்ள உண்மைத்தன்மையை நாம் சந்திக்கவேண்டுமெனில் நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாக செயல்படவேண்டும் என இறைவன் எதிர்பார்க்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் ஊர் மக்கள் அவரைக் குறித்த முற்சார்பு எண்ணங்களுடன் செயல்பட்டதால், அவரால் அப்பகுதியில் புதுமைகளை நிகழ்த்த முடியவில்லை, என்ற இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஓர் எளிமையான குடும்பத்தில், தங்களுள் ஒருவராக பிறப்பெடுத்த இயேசுவால் எவ்வாறு போதிக்கவும், அருஞ்செயல்கள் ஆற்றவும் முடிகிறது என, ஊர் மக்கள் அவரைச் சந்தேகித்ததற்கு காரணம், கடவுளால் இவ்வளவு கீழறங்கி வந்து மக்களுக்கு நிகராக உரையாடமுடியாது என்ற முன்சார்பு எண்ணமே எனவும் உரைத்தார் திருத்தந்தை.

ஆனால், இயேசுவோ மக்களின் அடிப்படையான எண்ணங்களை புரட்டிப் போட்டார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் சீடர்கள் அல்ல, மாறாக இயேசுவே சீடர்களின் காலடிகளைக் கழுவினார் என்பதையும் எடுத்துரைத்து, இந்த நவீன கால எடுத்துக்காட்டாக, அன்னை தெரேசா உள்ளார் என்பதையும் மேற்கோளாக காட்டினார்.

கடவுளின் அருளைப் பெறமுடியாமல் இருப்பதற்கு, நம் விசுவாசமின்மை ஒரு காரணமாக அமைந்துவிடக்கூடாது, என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவரும், தன் வாழ்வு வழியாக, சாட்சிகளாக விளங்க வேண்டும் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான்

Comments are closed.