கிறிஸ்துவின் மகிமையை அவரின் சிலுவையிலிருந்து பிரிக்க இயலாது

திருப்பொழிவுசெய்யப்பட்டவரான கிறிஸ்துவின் மகிமையை, அவரின் சிலுவையிலிருந்து பிரிக்க இயலாது என்பதால், கிறிஸ்துவின் பாதையில் முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம் என, கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான ஜூன் 29, இவ்வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், 14 புதிய கர்தினால்கள், ஏனைய கர்தினால்கள் மற்றும் பேராயர்களுடன் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெருவிழாவின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

நீங்கள் என்னை, யார் எனச் சொல்கிறீர்கள் என, இயேசு தம் திருத்தூதர்களிடம் கேட்டபோது. சீமோன் பேதுரு, அவரிடம், நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத்.16,16) என்று விசுவாச அறிக்கையிட்டார் என்றுரைத்த திருத்தந்தை, கடவுளால் திருப்பொழிவுசெய்யப்பட்டவரான கிறிஸ்து, தம் தந்தையின் அன்பையும், இரக்கத்தையும் உலகின் கடையெல்லைவரை தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கிறார் என்றார்.

நம் நல்ல பெயர், நம் வசதிகள், நம் பதவி.. போன்றவற்றை இழக்கவும், ஏன் மறைசாட்சிய வாழ்வையும்கூட சந்திக்க நேர்ந்தாலும், உலகில் ஒவ்வொருவருக்கும், வாழ்வின் எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கும், இயேசுவின் இந்த இரக்கமுள்ள அன்பை வழங்க வேண்டும் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தம் மரணம் பற்றி அறிவிக்கையில், அதை ஏற்க இயலாமல் பேதுரு இருந்தபோது, அவர் ஆண்டவரின் எதிரியாக மாறுகிறார் மற்றும், மெசியாவின் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தார் என்றுரைத்த திருத்தந்தை, பேதுரு போன்று நாமும், தீயவனின் முணுமுணுப்பைக் கேட்கும் சோதனைக்கு உட்படும்போது, மறைப்பணிக்குத் தடைக்கற்களாக மாறுகிறோம் என்று மறையுரையாற்றினார்

Comments are closed.