ஜெனீவாவில் திருத்தந்தையுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டம்
இவ்வியாழன் மாலை 3.45 மணிக்கு, உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் மையத்திலுள்ள Visser’t Hooft அறையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலில், WCC மன்ற பொதுச் செயலர் போதகர் Olav Fykse Tveit அவர்கள் உரையாற்றினார். “ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே, இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம்(தி.பா.118:24)” என்ற திருப்பா வார்த்தைகளுடன் உரையைத் தொடங்கினார், போதகர் Tveit. இன்று நாமிருக்கும் நிலையை எட்டுவதற்கு எழுபது ஆண்டுகள் எடுத்துள்ளன. இந்நாள் வரலாற்றில் திருப்புமுனையாக உள்ளது. இந்தப் பயணத்தைத் தொடர்வோம் என்றார் போதகர் Tveit.
மேலும், இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் திருத்தந்தையே வரவேற்றுப் பேசிய, WCC மன்றத்தின் மையக்குழுவின் தலைவர் Agnes Abuom அவர்கள், திருத்தந்தையே, உம் வரவு, WCC மன்றத்தின் உறுப்பு சபைகளுக்கும், உலகிலுள்ள நன்மனம்கொண்ட ஏராளமான மக்களுக்கும், நம்பிக்கையும் ஊக்கமும் தருவதாக உள்ளன. எம் பயணத்தில் உடன் திருப்பயணிகளாக உம்மோடு சேர்ந்து எம்மால் பயணிக்க இயலும் என்றார். துன்புறுவோரைச் சந்திப்பதற்கும், வாழ்வெனும் கடவுளின் கொடையைக் கொண்டாடுவதற்கும், நீதி மற்றும் அமைதி தேவைப்படும் இடங்களில் வாழும் மக்களை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், திருத்தந்தையே, உம்மோடு சேர்ந்து எம்மால் பயணிக்க இயலும். நீ வேகமாகப் போக விரும்பினால் தனியாகச் செல். தொலைதூரமாகச் செல்ல விரும்பினால் சேர்ந்து செல் என்ற ஓர் கூற்று ஆப்ரிக்காவில் உள்ளது. உலகில் துன்புறும் மக்களுக்காகச் செபிப்போம் என்று கூறினார் Agnes Abuom. சேர்ந்து செபித்தல், சேர்ந்து நடத்தல், சேர்ந்து பணியாற்றுதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இச்சந்திப்பில், திருத்தந்தையும் உரையாற்றினார்.
இச்சந்திப்பை நிறைவுசெய்து, ஜெனீவா Palexpo மையத்தில் கத்தோலிக்கருக்குத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியை நிறைவுசெய்து உரோமைக்குப் புறப்படுவது திருத்தந்தையின் ஜெனீவா பயணத்திட்டத்தில் உள்ளது.
மார்ட்டின் லூத்தர் அவர்களால் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட சீர்திருத்தத்தை முதலில் ஏற்ற நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். கால்வின் நகரம் என அழைக்கப்படும் ஜெனீவாவுக்குச் சென்ற மூன்றாவது திருத்தந்தையாக, இவ்வியாழனன்று அங்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் இந்த ஒருநாள் ஜெனீவா பயணம், அவரின் 23வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்புக்காக எடுத்துவரும் முயற்சிகள் பலன்தர செபிப்போம். மேலும், கத்தோலிக்க இளையோரின் பாதுகாவலரான புனித அலோசியுஸ் கொன்சாகா அவர்களின் விழாவான ஜூன் 21, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இளையோருக்கு அன்பு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார். “அன்பு இளையோரே, அடிக்கடி கடினப்படும் வயதுவந்த எங்களின் இதயங்களுக்கு உதவுங்கள். உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் பாதையைத் தேர்ந்துகொள்ள எங்களுக்கு உதவுங்கள்” என்பது, திருத்தந்தையின் டுவிட்டரில் வெளியானது
Comments are closed.