தேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்

உதவி தேவைப்படும் நம் அயலவரை வரவேற்பதற்கு அஞ்ச வேண்டாமென, உலக புலம்பெயர்ந்தவர் நாளான இப்புதன்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 20, இப்புதனன்று, புலம்பெயர்ந்தவர் உலக நாளை ஐ.நா. நிறுவனம் கடைப்பிடித்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் டுவிட்டரில், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர் அல்லது புலம்பெயர்ந்தவரில் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம், எனவே, தேவையில் இருக்கும் நம் அயலவரை வரவேற்கும் பாதையில்,  அச்சத்திற்கு இடமளிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னும், இந்த புலம்பெயர்ந்தவர் உலக நாளில், திருத்தந்தை வெளியிட்ட மற்றுமொரு டுவிட்டர் செய்தியில், ஒரு மனிதரின் மாண்பு, அவர் குடிமகனாகவோ, புலம்பெயர்ந்தவராகவோ அல்லது குடிபெயர்ந்தவராகவோ இருப்பதில் சார்ந்து இல்லை. போர் மற்றும் துன்பங்களுக்குத் தப்பித்துவரும் மக்களைக் காப்பாற்றுவது, ஒரு மனிதாபிமானச் செயலாகும் என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.

மேலும், இந்த புலம்பெயர்ந்தவர் உலக நாளுக்கென காணொளி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒருமைப்பாடும், பரிவிரக்கமும் காட்டப்பட்டு, அவர்களின் துன்பங்கள் களையப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.