நீ ஒரு சிறிய விதைதான், உனக்குள் ஒளிந்திருப்பதோ பெரிய மரம்

சில ஆண்டுகளுக்கு முன்பாக McGuffey’s Reader என்னும் ஆங்கில மாத இதழில் வந்த ஒரு கதை. கற்பனைக் கதைதான்.

ஒரு பத்திரிக்கையாளரின் வீட்டில் பழைய கடிகாரம் ஒன்று இருந்தது. அந்தக் கடிகாரம் திடிரென்று ஒருநாள் தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது. “நீ உன்னுடைய ஓட்டத்தை ஏன் இப்படி முடித்துக்கொண்டாய்?” என்று பத்திரிக்கையாளர் அதனிடம் கேட்டபோது, அது, “எனக்கு ஓராண்டிற்கு 3,15,36,000 (மூன்று கோடியே பதினைந்து லட்சத்து, முப்பது ஆறாயிரம்) முறை டிக் டிக் டிக் என அடிக்கவேண்டுமே, அதை நினைத்துப் பார்த்தபோது, எனக்கு மலைப்பாக இருந்தது. அதனால்தான் என்னுடைய ஓட்டத்தை நிறுத்திக்கொண்டேன்” என்று பதில் சொன்னது.

கடிகாரம் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் அதனிடம் பேசத் தொடங்கினார். “இங்கே பார்! நீ ஓராண்டிற்கு 3,15,36,000 முறை டிக் டிக் டிக் என அடிக்கவேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே, ஒரு நொடிக்கு ஒரு டிக் அடித்தாலே போதும் என நினைத்துக்கொள், உன்னால் ஓராண்டிற்கு 3,15,36,000 நொடிகள் என்ற மிகப்பெரிய இலக்கை மிக எளிதாகக் கடந்து விடலாம்” என்றார். அதன்பிறகு அந்தப் பழைய கடிகாரம் ஒரு நொடிக்கு ஒரு டிக் என அடித்து, மிகப் பெரிய இலக்கை எளிதாக எட்டியது.

எந்த ஒரு மாற்றமும் சரி, முன்னேற்றமும் சரி திடிரென்று தோன்றிவிடுவதல்ல, படிப்படியாகத் தோன்றக்கூடியது என்னும் உண்மையை இந்த கதையானது நமக்கு அருமையாகஎடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினோறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் இறையாட்சி திடிரென்று தோன்றுகின்ற ஒன்றல்ல, அது படிப்படியாக வளரக்கூடியது என்னும் செய்தியைத் தாங்கி வருகின்றது. நாம் அதனைக்குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகுவிதை என்பது எல்லா விதைகளிலும் சிறிய விதை. ஆனால், அது வளர்ந்து மரமாகின்றபோது வானத்துப் பறவைகள் எல்லாம் தங்குகின்ற அளவுக்கு பெரிய மரமாக மாறுகின்றது. அதுபோன்றுதான் நாசரேத்து என்னும் குக்கிராமத்தில் விதைக்கப்பட்ட இறையாட்சிக்கான விதை, வளர்ந்து, எல்லா நாடுகளையும், எல்லா மக்களையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவரும் என்கிறார் இயேசு கிறிஸ்து. ஆகையால், இறையாட்சி என்பது திடிரென்று ஓர் இரவுக்குள் வளர்ந்துவிடுகின்ற ஒன்றல்ல, அது படிப்படியாக வளரக்கூடியது என்னும் உண்மையை மிக எளிதாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இறையாட்சி படிப்படியாக வளரக்கூடியது என்னும் சிந்தித்த நாம், அந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதையும் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு படிக்கின்றோம். “உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலைமேல் நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்துப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிகழ்களில் அவை வந்து தங்கும்”.

மேலே படித்த வார்த்தைகளை ஆழமாகப் படித்திருந்தோம் என்றால், ஏன் இன்னுமொரு முறை படித்தோம் என்றால், கடவுள்தான் கேதுரு மரத்தின் வளர்சிக்குக் காரணம் என்னும் உண்மையை எளிதாக அறிந்துகொள்ளலாம், இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் நாம் படிக்கக்கேட்ட தானாய் முளைத்து வரும் விதை உவமை கூட ஆண்டவர்தான் அந்த விதையின் வளர்சிக்குக் காரணம் என்று சொல்வார் இயேசு கிறிஸ்து. ஆகவே, இறையாட்சி என்ற ஒன்று படிப்படியாக வளர்ந்து, வானத்துப் பறவைகள் அனைத்தும் தங்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய மரமாக வளர்வதற்கு முழுமுதல் காரணம் ஆண்டவர்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. (இங்கே குறிப்பிடப்படும் வானத்துப் பறவைகள் என்பதை இறையாட்சி எல்லாருக்கும் உரித்தானதாகப் புரிந்துகொள்ளலாம்).

Comments are closed.