மறையுரைச் சிந்தனை

தீய செயல் மட்டுமல்ல, தீய சிந்தனையும் பாவம்தான்!

ஒரு நகரில் வசதி படைத்த சகோதரர்கள் இருவர் இருந்தனர். இருவரும் பெண் பித்தர்கள், இருவரும் மோசமான பேர்வழிகள். பணம் இருக்கும் திமிரில் இருவரும் யாருக்கும் சரியான மதிப்புக் கொடுக்காதவர்கள்.

ஒருநாள் திடிரென்று அந்த சகோதரர்களில் இளையவர் இறந்துவிட்டார். எனவே மூத்தவர் அங்கிருந்த பங்குத்தந்தையிடம் வந்து, “பாதர்! என் சகோதரன் இறந்துவிட்டான். அவனை நல்லடக்கம் செய்யவேண்டும். அதற்கு முன்னதாக அவனுக்கு நடைபெறும் இறுதி பயணத் திருப்பலியில் அவனை ‘புனிதர்’ என்று சொல்லவேண்டும்” என்றார். இதைக் கேட்ட பங்குத்தந்தை, “உம் சகோதரனை நல்லடக்கம் வேண்டுமானால் செய்கிறேன். ஆனால் புனிதர் என்றெல்லாம் சொல்லமுடியாது” என்று மிகவும் கறாராகப் பேசினார்.

அவரோ, “நான் ஆலய வளர்ச்சிப் பணிக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். தயவுசெய்து நீங்கள் என் சகோதரனை புனிதர் என்று சொல்லுங்கள்” என்று மிகவும் கெஞ்சிக் கேட்டார். வேறு வழியில்லாமல் பங்குத்தந்தை அவரை புனிதர் என்று சொல்ல சம்மதம் தெரிவித்தார்.

இறுதிப்பயணத் திருப்பலியின்போது அந்த செல்வந்தரின் சொந்த பந்தங்கள் எல்லாரும் ஆலயத்தில் கூடியிருக்க, பங்குத்தந்தை மறையுரை ஆற்றத் தொடங்கினார். அவர் என்ன பேசப்போகிறார் என்று இறந்துபோனவரின் சகோதரர் மிகவும் ஆர்வமாய் கேட்கத் தொடங்கினார். அப்போது பங்குத்தந்தை, இதோ! இறந்து இறைவனின் திருப்பீடத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றாரே, இவர் எப்படிப்பட்டவர் என்பது இந்த ஊருக்குத் தெரியும். ஆனால் இவரை இவருடைய மூத்த சகோதரரோடு ஒப்பிடும்போது இவர் ஒரு ‘புனிதர்’தான் என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த இறந்தவரின் மூத்த சகோதரருக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது.

Comments are closed.