அமெரிக்க,வட கொரிய தலைவர்கள் சந்திப்பு குறித்து திருஅவை

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த தங்களின் திருப்தியை வெளியிட்டுள்ளனர், திருஅவைத் தலைவர்கள்.

சிங்கப்பூரின் Sentosa தீவிலுள்ள Capella பயணியர் விடுதியில், இச்செவ்வாய் சிங்கப்பூர் நேரம் காலை 9 மணிக்கு இவ்விரு தலைவர்களும் கைகுலுக்கி, 45 நிமிடங்கள் கலந்துரையாடிய பின்னர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருப்பது, கொரிய தீபகற்பத்தில் அமைதிக்குப் புதிய வாய்ப்புக்களுக்கு வழியமைத்துள்ளது என நம்பப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லையெனினும், அணு அச்சுறுத்தலற்ற பகுதியாக கொரிய தீபகற்பத்தை அமைப்பது, வட கொரிய பொருளாதாரத்தின் நிலையான தன்மைக்கும், பொருளாதாரத்திற்கும் ஆதரவளிப்பது ஆகிய இரண்டும், இந்த ஒப்பந்தத்தில் உள்ளன என செய்திகள் கூறுகின்றன.

1953ம் ஆண்டில் கொரியச் சண்டை முடிவுற்ற ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்குப்பின், அமெரிக்க மற்றும் வட கொரிய அரசுத்தலைவர்கள் சந்தித்த இந்நிகழ்வு குறித்து, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, தென் கொரிய திருப்பீட தூதர் பேராயர் Alfred Xuereb அவர்கள், இச்சந்திப்பு, அமைதியின் வரலாற்று நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

இன்னும், சிங்கப்பூரில் இந்த நிகழ்வு இடம்பெற்றது குறித்து அந்நாட்டு கத்தோலிக்கர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன், இக்கலந்துரையாடல்கள் வெற்றிபெற உருக்கமாகச் செபித்தனர் என, சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள் தெரிவித்தார்

Comments are closed.