கடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக

கடவுளின் அன்பு எல்லையற்றது, அவரின் எளிமையிலும், இரக்கத்திலும் அவரின் மகத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளிக்கிழமை காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் திருஇதயப் பெருவிழாவான இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியில், இப்பெருவிழாவை, கடவுளன்பின் விழா எனக் கொண்டாடலாம் எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு பற்றி, பெரிய உரைகள் ஆற்றுமாறு கிறிஸ்து நம்மிடம் கேட்கவில்லை, மாறாக, அவரைப் பின்பற்றி, சிறிய மற்றும் தெளிவான அன்புச் செயல்கள் ஆற்றுமாறு கேட்கிறார் என்று கூறினார்.

கடவுள் எப்போதுமே முந்திக்கொள்பவர், அவரை முதலில் அன்புகூர்ந்தது நாம் அல்ல, மாறாக, அவரே நம்மை முதலில் அன்புகூர்ந்தார் என்றும், கடவுளின் அன்பைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல என்றும், கிறிஸ்துவின் அன்பு, அனைத்து அறிவையும் கடந்தது என்றும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் போதனைமுறை, எளிமையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரின் மேன்மை, தெளிவான செயல்களில் காட்டப்பட வேண்டிய அன்பு ஆகிய தலைப்புக்களிலும் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, மீட்பு வரலாறு முழுவதும், மாபெரும் ஆசிரியராக, கடவுள் தம் அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறினார்.

இன்றைய முதல் வாசகமான இறைவாக்கினர் ஓசேயா பகுதியிலிருந்து விளக்கிய திருத்தந்தை, இறைவன் தம் அன்பை அதிகாரத்தால் வெளிப்படுத்தவில்லை என்று கூறினார். எம் மக்களுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; அவர்களைக் குணமாக்கியது நானே என, ஓசேயா இறைவாக்கினர் வழியாக இறைவன் சொல்கிறார் என்றார் திருத்தந்தை

Comments are closed.