திருத்தந்தை – ஜூன்-ஆகஸ்ட் மாதங்களின் திருவழிபாடுகள்

திருநற்கருணை, நற்பணிகளின் கனிகளை உற்பத்தி செய்யவும், உண்மையான கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதற்கும் நமக்கு சக்தியளிக்கின்றது என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டன.

மேலும், வருகிற ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவழிபாட்டு நிகழ்வுகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தையின் திருவழிபாட்டுக்குப் பொறுப்பான, பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள், இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.

உரோம் புறநகரிலுள்ள ஓஸ்தியா புனித மோனிக்கா ஆலயத்தில், ஜூன் 3, ஞாயிறு மாலை 6 மணிக்கு, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி, அங்கிருந்து, நல்ல காற்று அன்னை மரியா ஆலயத்திற்கு, திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 21 வியாழனன்று, சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, 28ம் தேதி வியாழன் மாலை நான்கு மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புதிய கர்தினால்கள் நிகழ்வை நடத்துவார்.

ஜூன் 29ம் தேதி வெள்ளிக்கிழமை, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று, காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றும் திருப்பலியில், புதிய பேராயர்களுக்கு வழங்கப்படும் பால்யம் என்ற கழுத்துப்பட்டைகளை ஆசீர்வதிப்பார், திருத்தந்தை.

ஜூலை 7, சனிக்கிழமையன்று, இத்தாலியின் பாரி நகர் சென்று, மத்திய கிழக்கில் அமைதிக்காக, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப நிகழ்வில் கலந்துகொள்வார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.