மறையுரைச் சிந்தனை (மே 29)

இறையடியார்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு”

அமைச்சர் ஒருவர் துறவு மேற்கொண்டு தனிமையில் வாழ விரும்பினார். எனவே அவர் அடர்ந்த மலைக் காட்டிற்குள் சென்று ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டு வசிக்கத் தொடங்கினார். அங்கேயும் அவரைத் தேடிக்கொண்டு அந்த நாட்டு அரசன் வந்தான். ஏனென்றால், அமைச்சர் மீது அரசனுக்கு மரியாதையும் பிரியமும் அதிகம்.

“அமைச்சரே, நீங்கள் இப்படித் தன்னந்தனியே காட்டுக்குள் வந்து இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது” என்றான் அந்த அரசன். இப்படிச் சொன்ன அரசன் தொடர்ந்து அவரிடம், ‘நான் உங்களுக்கென்று ஒரு உல்லாச மாளிகை கட்டித் தருகிறேன். உங்களைச் சகல வசதிகளோடும் வாழவைக்கிறேன். நீங்கள் மீண்டும் ஊருக்குள்ளேயே வந்துவிடவேண்டும்” என்றான். அதற்கு அமைச்சர் அவரிடம்,
“அரசே, உன்னுடைய அன்புக்கு நன்றி. எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் துறவியாக வாழ விரும்புகிறேன் அதற்கு இந்த இடம்தான் சரி! தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று மறுத்துவிட்டார்.

அரை மனத்தோடு அரசன் சம்மதித்தான். பின்னர் அமைச்சரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். பத்தடி நடந்தவுடன் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “அமைச்சரே, இங்கே நீங்கள் வழிபடுவதற்குக் கோவில் ஏதாவது இருக்கிறதா?’ என்றான். “கோவிலா? அது எதற்கு? என்று கேட்ட அமைச்சரிடம் அரசன், “வேறு எதற்கு? சாமி கும்பிடுவதற்குத்தான்!” என்றார். “அதெல்லாம் அவசியமில்லை’ என்றார் அமைச்சர். அப்போது அரசன் முகத்தில் திடீர் வெளிச்சம். “அமைச்சரே, உங்களுக்கு நான் எதுவும் செய்யக்கூடாது என்று தடுத்துவிட்டீர்கள். அதற்குப் பதிலாக இங்கே நீங்கள் வழிபடுவதற்கு ஒரு நல்ல கோவில் கட்டித்தருகிற பாக்கியத்தையாவது எனக்குக் கொடுங்கள். தங்கமும் வெள்ளியும் வைடூரியமுமாக இழைத்து கட்டித் தருகிறேன். அங்கே நீங்கள் நிம்மதியாக இறைவனை வழிபடலாம். தியானம் செய்யலாம்” என்றார்.

அமைச்சர் ஒரு விநாடி தயங்கினார். “நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாளைக்குக் காலையில் பதில் சொல்லட்டுமா?” என்றார். அரசன் ஒப்புக்கொண்டான். பின்னர் அவனும் தன்னுடைய படை பரிவாரங்களோடு அந்தக் காட்டிலேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட்டான்.

அடுத்தநாள் காலை அவர்கள் விழித்து எழுந்தபோது அமைச்சரைக் காணவில்லை. அவரோ குடிசைகூட இல்லாத இன்னொரு காட்டைத் தேடி காணாமல் போயிருந்தார்.

துறவு என்பது ஏதாவது ஒன்றைத் துறப்பது அல்ல, எல்லாவற்றையும் துறப்பது. அந்த விதத்தில் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அமைச்சர் தன்னுடைய பதவி, அந்தஸ்து, அதிகாரம் மட்டுமல்லாமல் கடைசியாகத் தான் கட்டியிருந்த சிறு குடிசையும்கூட துறந்துவிட்டு எங்கோ ஆளில்லா காட்டுக்குள் போனது துறவு வாழ்வுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, (எங்களுக்கு எண்ணக் கிடைக்கும்?)” என்கின்றார். பேதுரு இயேசுவிடத்தில் இவ்வாறு சொல்வதற்கு முன்னதாக நடந்த நிகழ்வையும் நாம் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதற்கு முன்னதாக ஒருவர் இயேசுவிடம் வந்து, “நிழைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கும்போது இயேசு அவரிடம், “நீர் போய் உமக்கு உள்ளவற்றை விட்டு ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்பார். இதைக் கேட்கும் பேதுரு, “எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றி வந்திருக்கின்றோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்பது போல் யேசுவிடம் கேட்கின்றார்.

‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்பதுபோல் சீடத்துவ வாழ்வில் என்ன கைம்மாறு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது கூட தவறுதான். இருந்தாலும் தன்னிடத்தில் இப்படிக் கேட்ட பேதுருவிடம் இயேசு, “என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதர, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக அவற்றையும் …. நிலைவாழ்வையும் பெறாமல் போகார்” என்கின்றார். ஆமாம், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அவர் தருகின்ற பரிசு அளப்பெரியது. அதே நேரத்தில் நாம் கைமாறை எதிர்பார்த்து இயேசுவின் சீடராக மாறுவதும் பொருள்ளில்லாத ஒன்று.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், கைம்மாறு கருதாமல் இயேசுவுக்குப் பணிசெய்வோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய நிலைவாழ்வையும் இன்ன பிற கொடைகளையும் நிறைவாய் பெற்றுக்கொள்வோம்.

Comments are closed.