சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆயர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் எழுச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், தங்களுடைய வாழ்வுரிமைக்காகப் போராடிய மக்கள் மீது, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், துப்பாக்கிச்சூடு நடத்தி, பல உயிர்கள் இழப்புக்குக் காரணமாயிருந்தவர்களை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும், அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த நூறு நாள்களாக, தூத்துக்குடி நகரையும், புறநகரையும் சார்ந்த பல ஆயிரம் மக்கள், எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் இல்லாமல் அமைதியாக அறவழியில் போராடி வந்துள்ளனர், மே 22ம் தேதியான இச்செவ்வாயன்றும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் எண்ணத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் சென்றபோதும்கூட, மக்கள் எந்த வன்முறைக்கும் இடமளித்தது கிடையாது, அப்படியானால் மக்களுக்கு எதிராக இந்த வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்வி எழுகின்றது என்றும், ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களின் அறிக்கை கூறுகின்றது

Comments are closed.