இயேசுவின் வல்லமை முன்னேற முடியாதவர்களையும் முன்னால் அனுப்பி வைக்கும்-குருமுதல்வர்
இறை திட்டம் தேடும்’ இளையோர் ஆண்டினை முன்னிட்டு இளவாலைப் புனித யாகப்பர் ஆலயத்தைச் சேர்ந்த புனித டொன்பொஸ்கோ இளையோர் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தவக்கால இறைதியானத் திருவழிபாடு அண்மையில் புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. இத்தியான குணமாக்கல் வழிபாட்டினை இந்தியாவிலிருந்து வருகை தந்த எம்மாவுஸ் இறைதியான இயக்குனர் அகஸ்ரின் மொண்டக்கட் அடிகளாரும் ரபாயேல் அடிகளாரும் இணைந்து நடாத்தினார்கள். இறுதிநாள் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் தலமையேற்று ஒப்புக்கொடுத்து மறையுரை ஆற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில் இயேசுவின் உத்தானத்தின் பின்பு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்களும் அவரது வல்லமையைத் தம் வாழ்வாலும் போதனையாலும் எடுத்தியம்பினர். நடக்க முடியாது சப்பாணியாக இருந்த முடவனையும் பொன்னோ வெள்ளியினால் அல்ல இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினால் நடக்கச் செய்து அவனுக்கிருந்த இழிநிலையைப் போக்கி அனைவருக்கும் முன்னால் முன்னோக்கிச் செல்ல வைத்தனர். அவ்வாறே இன்றும் எம்மத்தியில் ஆன்மீக சமூக வாழ்வில் சப்பாணிகளாகப் பலர் வாழ்கின்றனர். இந்நிலைகளிலிருந்து எம் வாழ்வை விடுதலையாக்க இறைதிட்டம் எம் மத்தியில் உணரப்பட அருட்தந்தையர்களின் வார்த்தை வல்லமையினால் குணம்பெற நம்பிக்கையோடு ஒன்றிணைந்து செபிப்போம் என்றார். இத்தியான திரிதின வழிபாடுகள் யாவும் பங்குத்தந்தை ம.யேசுரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது
Comments are closed.