இளையோரோடு இணைந்து நற்செய்தியை எடுத்துச் செல்வோம்

இளையோரோடு இணைந்து, எல்லாருக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வோம் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 21ம் நாளன்று சிறப்பிக்கப்படும், உலக மறைபரப்பு ஞாயிறுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்.

வாழ்வே மறைப்பணி, நாம் இயேசு கிறிஸ்துவை அறிவிக்கின்றோம், விசுவாசத்தை உலகின் கடையெல்லைவரை பரப்புவோம், அன்புக்குச் சான்று பகர்வோம் போன்ற தலைப்புகளில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோருக்கும், இளையோர் வழியாக, அனைத்து கிறிஸ்தவ சமூகங்களுக்கும், நம் ஆண்டவர் இயேசு கூற விரும்புவதை, விசுவாசத்தின் ஒளியில், மேலும் அதிகமாகப் புரிந்துகொள்வதற்கு, மறைப்பணிகளின் மாதமாகிய வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோரும், திருமுழுக்கின் வழியாக, திருஅவையின் உயிருள்ள உறுப்பினர்களாக மாறுகின்றனர் மற்றும், எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கும் பணியையும் பெற்றுள்ளனர் எனக் கூறியுள்ள திருத்தந்தை, விசுவாசத்தைப் பரப்புவது, திருஅவையின் மறைப்பணியின் மையம் எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து பொருளாதார மற்றும் ஆன்மீக ஏழ்மையும், நம் சகோதரர், சகோதரிகளுக்கு எதிரான எல்லாவிதமான பாகுபாடுகளும், கடவுளையும், அவரின் அன்பையும் புறக்கணிப்பதன் விளைவாக எப்போதும் உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இன்றைய டிஜிட்டல் உலகில், எதையும் எளிதில் நெருங்கலாம் என்ற நிலை தெரிகின்றது, நாம் நிறையத் தொடர்புகளை வைத்திருந்தாலும், வாழ்வின் உண்மையான ஒன்றிப்பை நாம் பகிர்ந்து கொள்வதில்லை என்று கூறியுள்ளார்.

கிறிஸ்துவைப் பின்செல்ல விரும்பும் இளையோர், தங்களது அழைப்பைத் தேடி, கண்டுணர்ந்து, காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இளையோர், கிறிஸ்துவோடு ஆள்-ஆள் உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவும் எல்லாப் பங்குத்தளங்கள், கழகங்கள், நிறுவனங்கள், துறவு சபைகள் போன்ற அனைத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்

Comments are closed.