மறையுரைச் சிந்தனை (மே 22)

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்”

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவர் தனது முதிய வயதை எய்துமுன் தன்னுடைய இரு வாரிசுகளையும் பண்படுத்த நினைத்தார். எனவே அவர் அந்நாட்டில் இருந்த புகழ்பெற்ற ஒரு மகானைத் தேர்ந்துதெடுத்து, அவரிடத்தில் தன்னுடைய இரு வாரிசுகளையும் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.

நாட்கள் உருண்டோடின. இளவரசர்கள் இருவரும் மகான் கற்றுக்கொடுத்த பாடத்தை மிக நல்ல முறையில் கற்றுவந்தார்கள். இதற்கிடையில் ஒருநாள் அரசர் தன் இரு பிள்ளைகளையும் பார்க்கப் போனார். அவர் அங்கே சென்ற நேரத்தில், தொழுகைக்கூடத்திற்கு முன்பாக இருந்த பாதங்களைக் கழுவும் இடத்தில் இளவரசர்கள் இருவரும் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க, தனது பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தார் அந்த மகான்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அரசர் கோபத்தோடு அரண்மனைக்குத் திரும்பிப் போய்விட்டார். நடந்ததை நினைத்து வருத்தப்பட்ட மகான், “பாடம் கற்க வந்த இளவரசர்களை இப்படிப் பாதம் கழுவும்படி பயன்படுத்திவிட்டேனே! அரசரும் கோபப்பட்டுவிட்டாரே!” என்று பெரிதும் வருந்தினார். பின்னர் அவர் தான் செய்ததற்கு அரசரிடத்தில் மன்னிப்புக் கேட்க வேகவேகமாக ஓடினார். ஆனால் அரசர் மகான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் அவரை இன்முகத்தோடு வரவேற்றார். மகானுக்கு ஒன்றும் புயயவில்லை. இருந்தாலும் தான் அவ்வாறு செய்திருக்கக்கூடாது என்று அரசரிடத்தில் மன்னிப்புக் கேட்டார்.

அப்போது அரசர் அவரிடம், “மேன்மை தங்கிய மகான் அவர்களே! அன்று நான் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்து போய் கோபப்பட்டது உண்மைதான். ஆனால், தாங்கள் பாதங்களுக்குத் தண்ணீர் ஊற்றும் தகுதியைத்தான் என் பிள்ளைகளுக்குத் தந்திருக்கிறீர்கள். பாதங்களையே கழுவும் தகுதியை அவர்களுக்கு எப்போது தரப்போகிறீர்கள்” என்றார். இதைக் கேட்டு அந்த மகானுக்கு அரசர் மீதும் மதிப்பும் மரியாதையும் உண்டானது. அதே நேரத்தில் அவர் அரசர் சொன்னபோன்று அவருடைய பிள்ளைகளை தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர்த்தெடுக்க உறுதிபூண்டார்.

பின்னாளில் அரசராகப் போகக்கூடிய தன்னுடைய பிள்ளைகள் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் இன்னும் அதிகமாக வளரவேண்டும் என்று நினைத்த அந்த அரசர் நம்முடைய பாராட்டுக்கு உரியவராக இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் தன்னுடைய பாடுகளைக் குறித்துப் பேசுகின்றார். ஆனால் சீடர்களோ அதைப் புரிந்துகொள்ளாமல், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடுகின்றார். இதை அறிந்த இயேசு வருந்துகின்றார். இருந்தாலும் தன்னுடைய சீடர் யார்? உண்மையில் யார் பெரியவர்? என்று அவர்களுக்கு விளக்கம் தருகின்றார். இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்கின்றார், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகும் அனைவருக்கும் தொண்டராக இருக்கட்டும்” என்று. இயேசுவைப் பொறுத்தளவில் யாரும் யாரைவிட உயர்ந்தவரோ பெரியவரோ கிடையாது. தம்மைத் தாமே தாழ்த்திக்கொண்டு அடுத்தவருக்குப் பணிவிடை செய்பவரே உண்மையில் பெரியவர். இதைப் புரிந்துகொள்ளாமல் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டது மிகவும் துரதிஸ்டவசமானது.

இயேசு இந்த உண்மையை விளக்க ஒரு குழந்தையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுகொள்கிறார்” என்கின்றார். குழந்தை தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த உதாரணம். அது ஒருபோதும் தன்னைப் பெரியவன் என்றோ/ பெரியவள் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. மாறாக அது எப்போதும் தாழ்ச்சியின் உறைவிடமாகவே இருக்கும். இயேசு தனது சீடர்களிடத்தில், இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கின்றார் என்றால், குழந்தையிடம் இருக்கக்கூடிய தாழ்ச்சியை, தூய உள்ளத்தை, உண்மையான அன்பை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்னையே ஏற்றுக்கொள்கின்றார் என்ற அர்த்தத்தில் கூறுகின்றார்.

நம்மிடத்தில் குழந்தையிடம் இருக்கக்கூடிய அந்த தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இயேசுவின் சீடர்களைப் போன்று யார் பெரியவன் என்ற போட்டியில் இருக்கின்றோம். இத்தகைய நிலை மாறி, நமக்குள் அன்பும் தாழ்ச்சியும் வளர வேண்டும். அப்போதுதான் இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறமுடியும்.

ஆகவே, நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற நான் பெரியவன் என்ற ஆணவத்தை அப்புறப்படுத்தி, தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.